Tue. May 21st, 2024

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிய நடவடிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டப்படுத்தவதற்காக புலனாய்வுப்பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அபாயமிக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 22மில்லியன் இலங்கையர்களையும் பாதுகாப்பதற்காக முப்படையினரும், பொலிஸாரும், அனைத்துப்பிரிவு புலனாய்வுத்துறையினரும் நேரம் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு மூன்று தசாப்த போரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கைவாழ் பொதுமக்கள் எவ்வாறு ஒத்துழைப்புக்களை நல்கினார்களோ அதேபோன்று கொரோனா வைரஸையும் நாட்டிலிருந்து முழுமையாக அகற்றுவதற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

பொதுமக்கள் எவரும் தனிமைப்படுத்தல் மையங்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் கொரோனா தொற்றுக் குறித்த அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனைகளுடன் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருப்பதானது இந்த நோயைக் கட்டப்படுத்துவதற்காக நாம் செய்யும் பாரிய சமுகக் கடமையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அண்மைய நாட்களில் வீட்டில் இருந்தவாறே சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன கூட்டிணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சுயதனிமைப்படுத்தல் அவசியமானவர்கள் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையுடன் அதனை மேற்கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தமது வீடுகளை சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் ஆலோசனையுடன் அடையாளப்படுத்தப்படுத்துவதிலிருந்து விலகியிருக்க கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்