Fri. May 17th, 2024

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் வருபவர்கள் மூலம் கோரோனோ பரவும் ஆபத்து , தகவல் தருமாறு கோரிக்கை

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் வருபவர்கள் தொடர்பில் உடனடியாக தகவல் தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கையில் கொரோனா தொற்றின் பரம்பல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மத்தியிலேயே புதிய நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
இதேவேளை இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயின் பரம்பல் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்நோய் காரணமான இறப்புக்களும் அதிகரித்து வருகிறது.இந்த சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப்படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.அவ்வாறு எமது நாட்டிற்குள் வருகை தருபவர்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்வதன் மூலம் எமது நாட்டில் இந்நோய் பரவுவதை தடுக்கக்கூடியதாக இருக்கும்.
எனவே இவ்வாறு யாராவது இரகசியமான முறையில் இந்தியாவிலிருந்து எங்கள் பிரதேசத்திற்கு புதிதாக வருகை தந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறியத்தரவும். அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் 24 மணிநேர அவசர இலக்கத்திற்கு 021 222 6666 அறியத்தருமாறு கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்