Fri. May 17th, 2024

அரியாலை பகுதி வீட்டில் பாரிய ஆயுதக் கிடங்கு!! -அகழ்வு நடத்த முடிவு-

யாழ்.அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டின் வளாகத்தில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினரால் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் அனுமதியினை இராணுவத்தினர் பொலிஸார் ஊடாக கோரியுள்ளனர்.

அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. எனினும் அந்த முகாம் வடமாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர் மூவரும் இந்த வீட்டிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்கள் வீட்டை வைத்திருந்தனர். தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதுதொடர்பில் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

அந்த ஆயுதக் கிடங்கு தொடர்பில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்று அறியமுடிகிறது.

நீதிமன்றின் அனுமதி கிடைத்ததும் நீதிவானின் முன்னிலையில் அந்த வீட்டு வளாகத்தில் ஆயுதக் கிடங்கைத் தேடி அகழ்வுப் பணிகள் இடம்பெறும் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பந்தப்பட்ட வீட்டில் பல தடவைகள் ஆயுதக் கிடங்கு தொடர்பில் ஆராய்ந்த போதும் அதுதொடர்பில் எந்தவொரு ஆயுதம் கிடைக்கவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்