Sat. Apr 20th, 2024

60 வயதிற்கு மேற்பட்டோருக்கான 3வது தடுப்பூசி

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை மேலதிக தடுப்பூசி வழங்கல் இம்மாதம் 29ம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மேலதிகமாக மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது (பைசர்) கார்த்திகை மாதம் 29 ஆம் திகதியிலிருந்து வழங்கப்பட உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே  இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து மூன்று மாத இடைவெளியின் பின் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அறியத்தரப்படும். கோவிட்-19 இற்காக இரண்டு தடுப்பூசிகளையும்; பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (பைசர்) பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு எதிர்வரும் மார்கழி மாதம் 04, 11 ஆம் திகதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள்; வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்