Sun. Jun 16th, 2024

5G வலையமைப்பும் அதன் பின்னால் உள்ள மக்களை குழப்பும் அரசியலும்

5G வலையமைப்பு தொடர்பாக ஊடகங்களில் பாரிய விவாதம் இடம்பெற்றுவருவதும் இதை கூட்டமைப்பு சாராத மற்றைய தமிழ் கடசிகள் தூக்கிப்பிடித்து கொண்டுவருவதும் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்து வருவதும் நாளாந்த நிகழ்வாக உள்ளது.

பொதுவாக ஒருநாட்டில் அல்லது இலங்கையில்  புதிதாக ஒரு அலைவரிசை பாவனைக்கு அறிமுகப்படுத்தும் பொழுது மத்திய அரசின் கீழ் வரும் தொலைத்தொடர்பு சம்பந்தமான அரச நிறுவனமே இதற்கான அனுமதியை அரசாங்கத்தின் சார்பாக வழங்கும். இதற்காக அனுமதியை  பாரிய ஒருவிலைக்கு நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யும். இதுவே 3G மற்றும் 4G அலைவரிசையின் போது இடம்பெற்றது. இந்தியாவில் இடம்பெற்ற 2G ஊழல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
இது இவ்வாறு இருக்க யாழ் மாநகரசபை இதற்கான அனுமதியை வழங்கிவிட்டது என்று கூறி மக்களுக்கு தவறான பிரசாரத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் , ஐங்கரநேசன் மற்றும்  இதர தமிழ் கட்சிகள்   மக்களை தவறாக வழிநடத்துதுகின்றன. மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகின்ற தொலைத்தொடர்பு பரிவர்த்தனை மற்றும் ஒழுங்காற்று அமைப்புக்கு மட்டுமே 5G வலையமைப்பை வழங்குதல் மற்றும் ஒழுங்கமைத்தல் அதிகாரம் இருக்கும். இவர்கள் முடிவெடுத்தாலும், பின்னர் அமைச்சரின் அனுமதி, அமைச்சரவையின் அனுமதி,பிரதமர் ஜனாதிபதி என்று நீண்ட அனுமதிக்கு பின்பே இது முழு அனுமதியைப்பெறும். இப்படி இருக்கையில், மாநகரசபை ஆளுநர் அனுமதி கொடுத்து விட்டார் என்பது சிறுபிள்ளைத்தனமானது.  மாநகரசபையால் இதில் ஒரு துரும்பளவு முடிவைக்கூட எடுக்கமுடியாது.  இது தொடர்பாக யாழ் மாநகர சபை மேஜர் ஆர்னோல்ட் பலதடவை எடுத்து கூறியபோதும் , மக்களை தவறான வழிக்கு இட்டு செல்வதற்கு மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
யாழ் மாநகர சபையால் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் லாம்ப் போஸ்ட் என்பது , வீதி விளக்குகள் , சமிக்சை விளக்குகள் ,பாதுகாப்பு கமெராக்கள் மற்றும் இலத்திரனியல் விளம்பர பலகைகள் மற்றும் பல இலத்திரனியல் கருவிகள் ( sensors )என்பவற்றை ஒரே இடத்தில் பொருத்தக்கூடியதாக இருக்கும். இப்போது உள்ள நிலைமையில், இவைகளை நிறுவுவதற்கு நிறைய போஸ்டுகள் தேவைப்படும். ஸ்மார்ட் லாம்ப் போஸ்ட்களை பயன்படுத்துமிடத்து இவகைளனைத்தையும் ஒரே இடத்தில மிகவும் குறைந்த இடத்தை பயன்படுத்தி மிகவும் நுட்பமாக பொருத்தத்தலாம். தற்போது உள்ள குற்றச்செயலைகளை கட்டுப்படுத்துவதற்கு வீதி பாதுகாப்பு கமெராக்கள் இன்றி அமையாதவை. இவைகள் கொழும்பு உட்பட பெருநகரங்களில் போக்குவரத்துக்கு மற்றும் குற்ற செயல்களை தடுப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் 5G சேவையோ அல்லது வேறொரு வலையமைப்போ வரும்பொழுது, அவைகள் மிகவும் வினைத்திறனுடனும் நுட்பமாகவும் இந்த ஸ்மார்ட் லாம்ப் போஸ்ட்களில் உள்ள இலத்திரனியல் சாதனங்களுடன் தொடர்புபடுத்தி சிறந்த வலையமைப்புகளை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கமுடியும் என்பதே உண்மை. ஏற்கனவே சிங்கப்பூர் ,ஹாங் காங் , கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை இந்த ஸ்மார்ட் லாம்ப் போஸ்ட்களை பாவித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் ஸ்மார்ட் லாம்ப் போஸ்ட்களை நிறுவுவதற்கு எண்ணி உள்ளது. 5G வலயமைப்புக்கோ அல்லது பிறிதொரு வலையமைப்பு வருமிடத்து( மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமிடத்து ), புதிதாக கோபுரங்கள் அமைக்காமல் ஏற்கனவே உள்ள இந்த ஸ்மார்ட் லாம்ப் போஸ்ட் களிலேயே பொருத்தமுடியும்.  மொத்தத்தில் இவை நீண்டகாலத்தில் குறைவான மின்சாரத்தை விளைத்திறனாக பயன்படுத்தி மின்சார சேமிப்புக்கு வழிகோலும்.
5G வலையமைப்பு உடல்நலத்துக்கு கேடாக இருப்பதென்று வைத்தியர்கள் அறிக்கை விட்டாலும், தற்போது இருக்கின்ற 4G வலையமைப்பு எதிர்காலத்தில் வரவிருக்கின்ற புதிய தொழிநுட்பங்களுக்கு போதாமையாகவே உள்ளது. 180 வைத்தியர்கள் இதற்க்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்கள் என்று இங்கே தூக்கி பிடிக்கிறார்கள், ஏன்  இவர்களின் தொகை 18,000 வைத்தியர்களாக இருந்தாலும், 5G இன் வரவை தடுத்து நிறுத்தமுடியாது. இதை இன்னுமொரு பக்கத்தில் பார்த்தால் உலகத்தில்   பல மில்லியன் வைத்தியர்கள் உள்ளார்கள் , இவர்களில் 1800 வைத்தியர்கள் என்பது 0.1% விகிதத்தை விட குறைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்வுகூறப்பட்ட தரவுகள்

 

மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு செல்லவேண்டிய ஊடகங்கள் கூட , அரசியல் வாதிகள் சொல்வதை மட்டும் பிரசுரிக்காமல் உண்மை எது என்பதை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். இவர்கள் செய்தியை சேகரிப்பவர்களாக ( reporters )மட்டுமில்லாமல் சிறந்த ஊடகவியாளர்களாக ( journalist ) உண்மைகளை மக்களிடத்தில் கொண்டு செல்பவர்களாக எப்போது மாறுவார்கள்?

  • இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளரால் நியூஸ் தமிழ் இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது . கட்டுரை தொடர்பாக உங்கள் கருத்துக்களை ஆசிரியருக்கு தெரிவிக்க விரும்பின், info@newsthamil.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்