4 விக்கெட்டுக்களால் யாழ் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற்றம்
அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யாழ் பல்கலைக்கழக அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் காலிறுதியாட்டம் மொறட்டுவ பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
காலிறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து கொழும்பு பல்கலைக் கழக அணி மோதியது.
நாணச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பல்கலைக்கழக அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு பல்கலைக் கழக அணி 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் பெரேரா ஆட்டம் இழக்காமல் 61, பதிரன 26, குணவரட்ண 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் யாழ் பல்கலைக்கழக அணி சார்பில் லோகதீஸ்வர் 2, சனின்டு 2 விக்கெட்டுகளையும் சுபேந்திரன், ஜனந்தன், துவாரகசீலன், டனுஸ்கா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
163 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பில் துவாரகசீலன் ஆட்டம் இழக்காமல் 79, டனுஸ்கா ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கொழும்பு பல்கலைக் கழக அணி சார்பில் விஜயசிங்க 3, பாலசூரிய 2, தென்னக்கோன் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.