5 போக்குவரத்து குற்றங்களைப் புரிந்தவருக்கு 84 ஆயிரத்து 500 ரூபா தண்டம் – யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படடவருக்கு 84500 ரூபா தண்டப்பணமாக விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவு இட்டுள்ளார் .
குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, மோட்டார் சைக்கிள் சைலன்சரை மாற்றியமைத்தமை , வாகன வரிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது முன்வைக்கப்பட்டது
5 குற்றச்சாட்டுக்களையும் எதிரி மன்றில் ஏற்றுக்கொண்ட நிலையில், அதனடிப்படையில் குற்றவாளியாக அவரை அறிவித்த நீதிமன்றம் , மோட்டார் சைக்கிள் சைலன்சரை உருமாற்றம் செய்த குற்றத்துக்கு 50 000 ரூபா தண்டமும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்கு 25 000ஆயிரம் தண்டமும் ஏனைய 3 குற்றச்சாட்டுக்களுக்கு 9 500 ரூபா தண்டமும் என மொத்தம் 84 500 ரூபா தண்டம் பணம் விதித்து உத்தரவிட்டது.
குற்றவாளி தண்டப்பணத்தில் ஒரு பகுதியை இன்றைய தினம் செலுத்த அனுமதித்த நீதிபதி மீதியை அடுத்த தவணையின் போது செலுத்துமாறு திகதியிட்டு வழக்கை ஒத்திவைத்தது.