400 மீற்றர் காணியை தாருங்கள்! பாதுகாப்பு செயலருக்கு யாழ்.மாவட்ட செயலர் கடிதம்.
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்டுவன்- மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் நீளமான பகுதியை மீள கையளிக்குமாறு யாழ்.மாவட்ட செயலர் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு கடிதம் எழுதியிருக்கின்றார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பனர் அங்கஜன் இராமநாதனின் பணிப்புக்கு அமையவே மாவட்ட செயலர் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கின்றார்.
குறித்த 400 மீற்றர் நீளமான வீதியை திறப்பதற்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையான மயிலிட்டி வடக்கு பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் ஒரு பகுதி பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டித் துறைமுகத்துக்கான பிரதான வீதியாகக் காணப்படுகிறது.
அதனால் பெரும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பிரதான வீதிக்குப் பதிலாக தனியார் காணி ஊடான மாற்றுப்பாதையால் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கட்டுவன் சந்தி தொடக்கம் மயிலிட்டிச் சந்திவரையான வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.