3 மணித்தியாலங்கள் போக்குவரத்து நடைபெறவில்லை பயணிகள் விசனம்

இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலையின் அசமந்த போக்கிற்கு பயணிகள் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 போக்குவரத்து நேற்றைய தினம் எந்தவித முன் அறிவித்தல்களும் இன்றி 3 மணித்தியாலங்கள் நடைபெறாமைக்கே அவர்கள் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழி போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால் பருவகால சீட்டை பெற்றுக் கொண்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவிகள், தமது சேவையை நிறைவு செய்து வீட்டிற்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அச்சுவேலி பகுதியால் பிரயாணத்தை மேற்கொள்ளும் பயணிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக பருத்தித்துறை சாலை அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பேரூந்து பழுதுபட்டுள்ளதாக தெரிவித்தார். அரை மணித்தியாலங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவை இடம்பெறுகின்ற போதிலும் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு 6 பேருந்து சேவைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் ஆனால் அதில் ஒரு சேவை கூட இடம்பெறவில்லை எனவும் பயணிகள் சுட்டிக் காட்டி உள்ளனர்.