Fri. Apr 26th, 2024

2 பிறழ்வுள்ள டெல்டாவை மிஞ்சும் 50 பிறழ்வுகளுடன் புதிய வைரஸ் ‘ஒமைக்ரான்’ -பயத்தில் உலக நாடுகள்

டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தடுப்பூசிகளை தாண்டி தாக்கக் கூடியது என்பதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் பெரும் உயிர் பலியை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய டெல்டா வைரசில்( 2 பிறழ்வுகள் ) கூட இவ்வளவு பிறழ்வுகள் இல்லை என்பதால், புதிய வைரஸ் மிகவும் கவலை தரக்கூடியதாக இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம், தற்போது, உலகில் உள்ள தடுப்பூசிகளின் வீரியத்தை தாண்டி பாதிக்கலாம், அதிக உயிர் பலிகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் நுழையும் சக்தி கொண்டதாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
புதிய கொரோனாவின் முள் புரதத்தில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த முள்ளை பயன்படுத்தி தான் வைரஸ்கள் மனித உடலுக்குள் நுழையும், நோய் மண்டலத்தை தாக்கும். எனவே, கொரோனா தடுப்பூசிகள் அனைத்துமே இந்த புரதத்தை குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய கொடிய வகை வைரஸ் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
புதிதாக பரவி வரும் இந்த வைரஸ் பற்றி ஆலோசிக்க, உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியது. நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வரிசையில் தற்போது புதிய வைரசுக்கு ‘ஒமைக்ரான்’ என்று பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை நாம் பார்த்ததில் கவலை அளிக்கிற வைரஸ் இதுதான் என்று இங்கிலாந்து சுகாதார முகமையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார்.இந்த வைரஸ் முதன்முதலாக காணப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் கவுடெங்கில் ‘ஆர் வேல்யூ’ என்று சொல்லப்படுகிற இதன் பரவல் விகிதம் 2 ஆக உள்ளது. இது உண்மையிலேயே மிகவும் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் பரவல் தடுப்பதற்காக தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசொத்தோ, எஸ்வாத்தினி ஆகிய 6 நாடுகளின் விமானங்களை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி விட்டது. புதிய உருமாறிய வைரஸ் மிகவும் கவலை அளிக்கிறது, இதனால்தான் தென் ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களை தடை செய்திருக்கிறோம் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தைப் போன்று ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்