Sat. Apr 20th, 2024

1 மாதத்தில் அமெரிக்கா, இத்தாலியில் நடந்த அதே சம்பவம்.. இந்தியா சுதாரிக்க வேண்டும்

அமெரிக்காவை போலவே இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு பின் கொரோனா வைரஸ் எப்படி வேகம் எடுத்ததோ அதேபோல்தான் தற்போது இந்தியாவிலும் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 785,777 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரம் இந்த எண்ணிக்கை 10 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா காரணமாக 37,815 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 164,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3126 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அமெரிக்கா போல இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக 1347 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.138 பேர் இதில் குணமடைந்துள்ள நிலையில், 1165 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நாடு முழுக்க 44 பேர் பலியாகி உள்ளனர். அதிகமாக மகாராஷ்டிராவில் 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் இந்தியாவில் 227 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. நேற்று டெல்லியில் மட்டும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 1024 பேருக்குத்தான் இந்தியாவில் கொரோனா இருந்தது. அதன்பின் இது வேகம் எடுத்துள்ளது.

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 202 பேருக்கு கொரோனா இருந்தது. 24 மணி நேரத்தில் அங்கு 32 பேருக்கு கொரோனா வந்துள்ளது . அதேபோல் மகாராஷ்டிராவில் 34 பேருக்கு ஒரே நாளில் கொரோனா வந்துள்ளது. தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா வந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 27 பேருக்கு கொரோனா வந்துள்ளது. கர்நாடகாவில் 10 பேருக்கு கொரோனா வந்துள்ளது.

இந்தியாவில் முதல் 200 நோயாளிகளுக்கு கொரோனா ஏற்பட மிக அதிக நாட்கள் எடுத்தது. பிப்ரவரி 15ம் தேதி இந்தியாவில் முதல் நபருக்கு கேரளாவில் கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மார்ச் 20ம் தேதிதான் 200வது நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அதாவது 200 பேருக்கு கொரோனா ஏற்பட 35 நாட்கள் ஆனது. ஆனால் திடீர் என்று வேகம் எடுத்து இருக்கும் கொரோனா, நேற்று ஒரே நாளில் மட்டும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 15ல் இருந்து இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட எடுத்துக் கொண்ட காலம் சரியாக 45 நாட்கள். மார்ச் 29ம் தேதிதான் நாம் ஆயிரம் நோயாளிகளை தொட்டோம். மற்ற உலக உலக நாடுகளை விட இது மெதுவானது என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் உண்மையில் உலகம் முழுக்க இதே நிலைதான். முதலில் கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக பரவும், அதன்பின் திடீர் என்று வேகம் எடுத்து, வரிசையாக பலரை தாக்கும். கொத்து கொத்தாக பலர் மருத்துவமனையில் சேர்வார்கள்.

உதாரணமாக அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது பிப்ரவரி 15. மார்ச் 15ம் தேதி சரியாக ஒரு மாதத்தில் அங்கு ஆயிரம் பேருக்கு கொரோனா வந்தது. ஆனால் அங்கு 4000 பேர் வரை மெதுவாக சென்ற கொரோனா வேகம் எடுத்தது. 4 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரத்தை தொட அங்கு ஆன நாட்கள் வெறும் 4 நாட்கள்தான். 20 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரத்தை தொட எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் 6 நாட்கள்தான். சரியாக ஒரு மாதம் கழித்து அங்கு கொரோனா வேகம் எடுத்தது.

இத்தாலியிலும் பிப்ரவரி 15ம் தேதிதான் கொரோனா ஏற்பட்டது. அங்கு ஆயிரமாவது நபருக்கு மார்ச் 1ம் தேதி கொரோனா ஏற்பட்டது. சரியாக 15 நாட்கள். ஆனால் அங்கு 2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் நபருக்கு கொரோனா ஏற்பட வெறும் 6 நாட்கள்தான் ஆனது. அங்கு கடைசி 6 நாட்களில் மட்டும் மொத்தம் 28 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதுதான் கொரோனா ஸ்டைல். அங்கும் சரியாக ஒரு மாதம் கழித்து அங்கு கொரோனா வேகம் எடுத்தது. முதல் 30 நாட்கள் மெதுவாகவும், அடுத்த நாட்களில் வேகமாகவும் கொரோனா பரவுகிறது.

இதற்கு ஒரு உதாரணம்தான் நேற்று இந்தியாவில் நடந்த நிகழ்வு. நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்தியாவின் கிராப் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. அமெரிக்கா, இத்தாலியில் ஒரு மாதத்திற்கு பின் நடந்த சம்பவங்கள் தற்போது இந்தியாவில் நடக்க துவங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் இந்தியா மிக கவனமாக இருக்க வேண்டும்.

கொரோனா என்பது ஒருவர் மூலம் இன்னொருவருக்கு தொடுதல் மூலம் பரவ கூடியது. அதேபோல் இந்த வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவ கூடியது. இதுதான் இந்த வைரஸ் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வேகம் எடுக்க காரணம். உதாரணமாக ஏ என்ற நபருக்கு கொரோனா வைரஸ் இருந்தும் அறிகுறி இல்லை. அவர் பல இடங்களுக்கு செல்கிறார். பலரை சந்திக்கிறார். அவருக்கு தெரியாமல் அவர் பலருக்கு கொரோனாவை பரப்புவார்.

இவர் மூலம் ஒரே நாளில் பலருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதான் ஒரே நாளில் கிராப் வேகமாக உயர காரணம் ஆகும். இந்தியா சுதாரிக்க வேண்டிய நேரம் இதுதான். இந்தியாவில் வரும் நாட்கள் கொரோனா வேகம் எடுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருந்தார்கள். அதற்கான முதல் நாள் நேற்று என்பது உறுதி ஆகியுள்ளது. இனி இது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்