Fri. Apr 19th, 2024

யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்றிட்டம்

தேசிய ரீதியில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து செல்வதினாலும் யாழ் மாவட்டம் சிவப்பு அபாய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாலும் ஜனாதிபதி செயலகத்தின் 2023.04.20 திகதிய PS/EAD/Circular/06/2023 இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் தேசிய, மாகாண, மாவட்ட, நிறுவன, கிராமிய மற்றும் வீடுகள் மட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக
யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
இச்செயற்பாட்டிற்கு அரசு, அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் வணக்கஸ்தலங்களின் தலைவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போதய அறிக்கையின் படி யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1160 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் டெங்கு நோயினால் 01 இறப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வழமைக்கு மாறான மழை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கான அபாயநிலை காணப்படுகின்றது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் குடாநாட்டில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றது.
இந்நிலையில் உடனடியாக நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுக்கும் முகமாக மே மாதம் 16 மற்றும் 17ம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறனாக முன்னெடுக்க சகல தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உத்தேச செயற்திட்டகாலம் -02 நாட்கள் 2023 மே 16 மற்றும் 17ம் திகதி.
செயற்பாடுகள்
01.பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழு கூட்டத்தை ஒழுங்குசெய்து இவ்விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக திட்டமிடல்.
02.கிராமிய மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழு கூட்டத்தை ஒழுங்கு செய்து கிராம மட்டத்தில் நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டங்களை முன்னெடுத்தல்,
03. இச்செயற்திட்டத்திற்கு 2,3 தினங்கள் முன்பதாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
04.இச்செயற்திட்ட காலப்பகுதியில் வீடுகளிலும், அரச, தனியார் நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள். வணக்கதலங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் நுளம்பு பெருகக்கூடிய நீர்தேங்கக்கூடிய பொருட்களை அகற்றுதல்.
05. பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் மேற்பார்வையுடன் மாணவர்களினால் சிரமதான அடிப்படையில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுத்தல்
06.உள்ளூராட்சி மன்றங்கள் பொதுமக்களிடமும் நிறுவனங்களிலும் சேகரித்த குப்பைகள், கொள்கலன்களை உரியமுறையில் திட்டமிட்டு அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
07.இச்செயற்திட்ட காலப்பகுதியில் சுகாதார திணைக்களம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து வீடுகளையும் நிறுவனங்களையும் தரிசித்து நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைளை கண்காணித்தல்.
08.பராமரிப்பற்ற காணிகள், வீடுகளை உரிமையாளர்/மேற்பார்வைக்கு பொறுப்பானவர்களுக்கு அறிவித்து துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
09.செயற்பாட்டு முன்னேற்ற அறிக்கைகளை பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிபரூடாக பிரதம செயலாளருக்கும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரூடாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்