Tue. Apr 16th, 2024

முதியவர்கள் தடுப்பூசிகளை பெறவும்- கேதீஸ்வரன் அறிவிப்பு

நாளை மறுதினம்  (13) தொடக்கம் சனிக்கிழமை வரை 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து முதியவர்களும் தவறாது பெற்றுக் கொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கோவிட்-19 உலகளாவிய தொற்றின் மூன்றாவது அலை இலங்கையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாவதால் இறப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளவர்கள் மத்தியில்  வயது வந்தவர்கள் மிக முக்கியமான தரப்பினராவர். இலங்கையில் 2020 மார்ச் மாதம் முதல் 2021 ஒக்டோபர் 09ஆம் வரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களில் 77.1% ஆனோர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
இந்நிலையில் மேலதிகமாக கோவிட் – 19 தொற்றினால் வயதுவந்தவர்கள் இறப்பதை தடுப்பதற்கு எமக்கு முன்னால் உள்ள ஒரே ஒரு உபாயம் தடுப்பூசிகளை அதிகளவு பெற்றுக் கொடுப்பதுவே.
ஆனால் வருந்தத்தக்க வகையில் யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான வயதுவந்தவர்கள் இத் தடுப்பூசியினை பெறாது உள்ளனர். அதற்கான காரணங்களில் 60 வயதிற்கு மேற்பட்ட பலரிடம் காணப்படும் தவறான அபிப்பிராயம் தமக்கு முதலாவது, இரண்டாவது தடுப்பூசிகளாக பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பதாகும். ஆனால் சுகாதார திணைக்களத்தினால் முதலாவது, இரண்டாவது  தடவைகளில் சினோபாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கோவிட்-19 இற்குரிய நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிப்பதற்காக மூன்றாவது தடவைக்கான தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் நாட்பட்ட நோய்கள் இருப்பவர்கள் இத்தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர். உண்மையில் நாட்பட்ட நோய் உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படும்போது நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன் இறப்புகளும் அதிகமாக ஏற்படும்.
பொதுவாக வயதுவந்தவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி குறைவடைவதுடன் அவர்கள் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களாயின் இந்நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாகவே காணப்படும்.  இலங்கையில் இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இறந்த 60 வயதுக்கு மேற்பட்டோரில் 94.3%  ஆனோர் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவர். எனவே 60 வயதிற்கு மேற்பட்ட நாட்பட்ட நோய் உள்ளவர்கள் கட்டாயமாக கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே யாழ் மாவட்டத்தில் இதுவரை கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் விசேட செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
அரசாங்க அதிபரின் வழிகாட்டலுடன் பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன் இதுவரை கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுடைய பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை முதல்  ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் தொடர்பான விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியினால் அறிவிக்கப்படும். தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு அழைத்துவரமுடியாது நோய்வாய்பட்டுள்ளவர்கள் தமது பிரதேச குடும்பநல உத்தியோகத்தர், பொதுச்சுகாதார பரிசோதகர், கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்வதன் மூலம் தமது வீடுகளிலேயே இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாட்டினை செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்