Fri. Apr 19th, 2024

பாடசாலை மாணவர்களுக்கான போட்டியை நடாத்தும் போது அனுமதி கட்டணத்தில் கட்டுப்பாடு வேண்டும் – ப.தர்மகுமாரன் வேண்டுகோள்

பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்படும் சுற்றுப் போட்டிகளுக்கு அனுமதி கட்டணத்தில் கட்டுப்பாடு அவசியம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  பாடசாலைமட்ட போட்டிகளை நடாத்தும் போது கல்வித்திணைகளம் தவிர்ந்த, ஏனைய சங்கங்கள், அமைப்புகள் மற்றும்  நிறுவனங்கள் போன்றவற்றால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகளுக்கு அனுமதி கட்டணத்தில் கட்டுப்பாடு அவசியம் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டானது மாணவர்களின் உடல், உள வளர்ச்சிக்கு  இன்றியமையாதது. அதற்காக சுற்றுப்போட்டிகளை வியாபாரமாக்குவதனால் போட்டியின் தரம் குறைக்கப்படுவதுடன், போட்டியில் பங்கு பற்றும் மாணவர்களின் மனநிலையும் பாதிப்புக்கு உள்ளாவதாக பெற்றோர்கள் விசனமடைகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாகாண கல்வித்திணைகளம் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதுடன் போட்டிக்கான தரத்தை அறிந்த பின்னரே அனுமதி வழங்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் அதிக கட்டணம் அறவிடப்படுவதால் வறிய மாணவர்களால் போட்டியில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படுவதுடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடான கருத்துருவாக்கம் ஏற்பட்டு பிள்ளைகள் விளையாட்டில் இருந்து இடைவிலகும் நிலை உருவாகின்றது. எனவே வளர்ந்து வரும் விளையாட்டு உலகில் வடமாகாணமும் உச்சம் தொட தரமான போட்டிகளை ஒழுங்கு செய்ய வேண்டும். இங்கு மாகாண உடற்கல்வி  உதவிக்கல்விப் பணிப்பாளர் போட்டிகளின் தரம் கட்டணம் தொடர்பாக கவனம் எடுத்து சிபாரிசு செய்ய வேண்டும். பாடசாலை சங்கங்களின் பதிவுகளை உறுதிப்படுத்துவதுடன் இயங்கு நிலையில் உள்ளதா என மேற்பார்வை செய்து இயங்காத சங்கங்களை புதுப்பித்து கல்வித்திணைக்கள சுற்றுப்போட்டி தவிர்ந்த ஏனைய போட்டிகள் தரம்மிக்கதாகவும், விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க கூடியதாகவும், எதிர் காலத்திற்கு உதவக் கூடியதாகவும், விளையாட்டு வளர்ச்சியை நோக்கியதாகவும் இருத்தல் வேண்டும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்