Fri. Apr 19th, 2024

பாடசாலைகளில் மலசலகூடங்கள் துப்பரவில்லை – சட்ட நடவடிக்க எடுங்கள்

துப்பரவின்றி சுகாதார சீர் கேடா காணப்படும் பாடசாலை மலசலகூடங்களை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிபர் மற்றும் சுகாதாரத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் மீது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடமாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் மலசலகூடங்கள் துப்பரவின்றி காணப்படுவதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாடசாலைகளில் வசதிகள் சேவைகள் கட்டணம் பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதுதவிர சில பாடசாலைகளில் சுகாதார பணியாளர்களும் காணப்படுகின்றனர். இந்நிலையில் பல பாடசாலைகளில் மலசலகூடங்கள் துப்பரவின்றி காணப்படுகின்றன.  இதனால் தமது பிள்ளைகள் மலசலகூடங்களுக்குச் செல்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டு, வீட்டிற்கு வருகின்றனர். இதனால் அவர்களின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதோடு, பல நோய்களுக்கும் உள்ளாகின்றனர். சில பாடசாலைகளில் மாணவர்கள் மலசலகூடங்களுக்குள் செல்ல முடியாமல் வாசலில் நின்றே கழிப்பதாகவும்,  சில பாடசாலைகளில் தூர்நாற்றத்திற்காக மூக்கிற்கு தமது பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டிக் கொண்டே செல்வதாகவும் கூறுகின்றனர். இதனை விட சில பாடசாலைகளில் நேரசூசி அமைக்கப்பட்டும், நேரம் தாழ்த்தி வரும் மாணவர்களை கொண்டே மலசலகூடங்கள் துப்பரவு செய்யப்படுவதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக பல பாடசாலை அதிபர்களிடம் முறைப்பாடுகளை தெரிவித்த போதிலும்,  தொடர்ந்தும் மலசலகூடங்கள் துப்பரவின்றியே காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பல பாடசாலைகள் வெளித் தோற்றத்தில் வர்ணம் பூசி,  பூமரங்கள் நாட்டப்பட்டு உள்ளதே தவிர,  மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
எனவே, பாடசாலை மலசலகூடங்களை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு மாணவர்களின் அடிப்படை சுகாதார வசதிகளைப் பேணாத அதிபர்கள் மற்றும் சுகாதாரத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்