Sat. Apr 20th, 2024

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட திட்டம்

இந்தியா: டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி டிச. 16. 2012 அன்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் 4 பேருக்கும் 2012 ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இதுவரை தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. குற்றவாளிகளின் கருணை மனுவை அனைத்து தரப்பும் நிராகரித்துள்ள நிலையில், விரைவில் அவர்களை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி நிர்பயாவின் பெற்றோர், டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றவாளிகள் 4 பேரும் நிர்பயா பலாத்கார சம்பவம் நடைபெற்ற நாளான டிச.16 அன்று தூக்கிலிடப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நிர்பயா பெற்றோர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை டிச.18 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருந்தாலும், குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. 4 பேரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்காக அவர்களின் உடல்எடை உள்ளிட்டவற்றிற்கு கணக்கிட்டு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த சோதனை நடைபெற்று வருகிறது.

4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்பது தீர்ப்பு. ஆனால் திகாரில் உள்ள தூக்கு மேடையில் ஒரே நேரத்தில் 2 பேரை மட்டுமே தூக்கிலிட முடியும். தூக்கிலிடும் நடைமுறைகளின் படி, ஒருவர் தூக்கிலிடப்பட்ட அரை மணி நேரத்திற்கு பிறகே, உயிர் பிரிந்ததை டாக்டர் உறுதி செய்ததற்கு பிறகு தான் அவரது உடல் தூக்கு கயிற்றில் இருந்து அகற்றப்படும். இதன் படி ஒரே சமயத்தில் 2 பேரை தூக்கிலிட்டால், அந்த சமயத்தில் மற்றவர்கள் 2 பேரை கட்டுப்படுத்துவது மிகுந்த சிரமமாக இருக்கும். இதனாலேயே ஒரே நேரத்தில் 4 பேரையும் தூக்கிலிடும் முடிவுக்கு சிறை அதிகாரிகள் வந்துள்ளனர்.

ஆனால் தூக்கிலிடப்படும் போது குற்றவாளிகளில் யாராவது ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், தண்டனை ஒத்திவைக்கப்படும். தூக்கு மேடை 1950 களில் கட்டப்பட்டது என்பதால் குற்றவாளிகளின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டு, அதை தாங்கும் வகையில் தூக்கு மேடை உள்ளதா என்பதையும், தூக்கிலிடும் கயிறின் தன்மை போன்றவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தண்டனை நிறைவேற்றப்படும் நாளன்று, குற்றவாளிகள் முன் தீர்ப்பு விபரத்தை நீதிபதி வாசிப்பார். குற்றவாளிகள் குளித்த பிறகு அன்று அவர்கள் விரும்பிய காலை உணவு வழங்கப்படும். பின் அவர்களுக்கு கறுப்பு நிற காட்டன் ஆடை, அணிவிக்கப்படும். தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முகம் கறுப்பு கவசத்தால் மூடப்படும். குற்றவாளிகளின் கைகள் பின்புறம் கட்டப்படும். கால்களும் கட்டப்படும். சிறை அதிகாரியின் உத்தரவு கிடைத்ததும் தூக்கு நிறைவேற்றப்படும். அரை மணி நேரத்திற்கு பிறகு, உயிர் பிரிந்ததை டாக்டர்கள் உறுதி செய்த பிறகு அவர்களின் உடல்கள் கயிறில் இருந்து பிரிக்கப்படும்.

சிறையின் புதிய விதிகளின்படி, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களில் குற்றவாளிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். முன்னதாக தனி அறைக்கு மாற்றப்பட்டு, உறவினர்களை சந்திக்க குற்றவாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். அவர்களின் ஆசைகள் பதிவு செய்யப்பட்டு, உடைமைகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பிடித்த உணவை சாப்பிடவும், மத வழிபாடுகளில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்படும்.

குற்றவாளிகளிடம் இதுவரை எந்த மாற்றத்தை காணவில்லை என கூறும் சிறை அதிகாரிகள், தண்டனையை நிறைவேற்ற 8 கயிறுகள் தயாராக உள்ளதாக கூறுகின்றனர். வெண்ணெய் அல்லது மெழுகு தடவப்பட்ட காட்டன் கயிறு என்பதால் கழுத்து துண்டாக வாய்ப்பில்லை என்றும், அதிகமான முடிச்சுகள் போடப்பட்டுள்ளதால் குறைந்த வலியுடனேயே உயிர் பிரியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்