Wed. Apr 24th, 2024

கல்வி வீழ்ச்சிக்கு காரணம் என்ன ஒரு பார்வை

பரீட்சையை எதிர்கொள்ளும்  மாணவர்களை சுயகற்றலுக்கு இடமளிக்காமல் தொடர்ந்தும் மேலதிக வகுப்புக்கள் நடாத்துவதனால் அவர்களின் கல்வி நிலையில் வீழ்ச்சி தான் ஏற்படும் என கல்வியியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் 23ம் திகதி க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கபடவுள்ள நிலையில் தற்போது பாடசாலைகளில் காலை 6 மணிக்கு வகுப்புக்கள் ஆரம்பமாகி பிற்பகல் 3மணி வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றது.
அதிபர் மற்றும் அதிகாரிகள் தமக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கு சிறந்த அதிகாரி என்பதை காட்டுவதற்காக மாணவர்களின் உள நிலைகளைக் கருத்தில் கொள்ளாது மேலதிக வகுப்புக்களை நடாத்துவதில் மாத்திரம் கவனமெடுத்துள்ளனர்.
கல்வி அமைச்சு மாணவர்களின் மூளை எவ்வளவு நேரம் கற்றலை ஏற்றுக் கொள்ளும் என ஆய்வு செய்து தரம் 1, தரம் 2,3, தரம் 4,5, தரம் 6-13 என பாடசாலை நேரங்களை வகைப்படுத்தியுள்ளனர். இதனைக் கருத்தில் கொள்ளாது, அதிபர்கள் போட்டி போட்டு மேலதிக வகுப்புக்கள் நடாத்துவதாக கூறி இதனை பெருமையாக  கோட்டக் கல்வி பணிப்பாளருக்கு அறிவிப்பர். கோட்டக் கல்வி பணிப்பாளரும் கூட்டங்களில் எனது பிரிவில்  இந்த பாடசாலை மேலதிக வகுப்பு நடாத்துகிறார்கள் என வலயக் கல்வி பணிப்பாளருக்கு தெரிவிப்பர். வலயக் கல்வி பணிப்பாளரும் அதை எடுத்துக் கொண்டு மாகாண கலந்துரையாடலில் மாகாணக் கல்வி பணிப்பாளருக்கு தமது வலயப் பாடசாலைகள் தொடர்பாக ஆசிரியர்களை எவ்வாறு மேலதிக சம்பளம் வழங்காமல் வேலை பார்பதாக மார்தட்டிக் கொள்வர், மாகாண கல்வி பணிப்பாளர் கல்வி அமைச்சுக்கும் தாம் மேலதிக கற்பித்தலை மேற்கொள்வதாக சுட்டிக் காட்ட, கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் புள்ளி விபரப் பட்டியலில் வடமாகாணம் இறுதி நிலை. இது ஏன்?, எவ்வாறு நடைபெறுகிறது? என அதிகாரிகள் சிந்திக்க மறுப்பதே வேதனைக்குரிய விடயம்.
இதனைத் தீர்கும் வழிகள் சில உள்ளது.
1.மேலதிக வகுப்பு தேவைப்படும் மாணவர்களை மாத்திரம் தெரிவு செய்து கற்பித்தல். ஏனெனில் மேலதிக வகுப்பிலும் கற்கும் மாணவர்களுக்கே கற்பித்தல் நடைபெறுகிறது.
2.கபொ.த.சாதாரண தரப் பரீட்சையில் 75%மான வினாக்கள் தரம் 10ற்குரிய அலகிலேயே காணப்படுகிறது. இதனை முறையாக கற்பித்தலையும், விடுபட்டவற்றை சரி செய்ய தரம் 10 மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களையும் நடாத்துதல்.
3.முறையாக கற்கும் மாணவர்களை மேலதிக வகுப்பிற்கு நிறுத்தல் தொடர்பாக கட்டாயப்படுத்தாது அவர்களின் சுய கற்றலுக்கு அனுமதி வழங்குதல்.
4.ஆரம்பக் கல்வி முடித்து தரம் 6இல் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களை விசேடமாக கவனித்தல் இது தொடர்ச்சியாக அடுத்தடுத்த தரங்களிலும் அவதானித்தல்.
ஏனெனில் அடிப்படை (அத்திபாரம்) சரியாக இடப்பட வேண்டும்.
5.ஒவ்வொரு வகுப்பாசிரியரும் தமது மாணவர்களுக்கு தினமும் 8 பாடங்களும் நடைபெறுகிறதா என அவதானித்து (மேற்பார்வை) முறையிடல். ஒவ்வொரு பகுதித் தலைவரும் தமது கடமைக் கூறுகளைச் சரிவரச் செய்தல்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை சரிவரச் செய்தாலே மாணவர்களின் கல்வி நிலை உயரும். ஒவ்வொரு பாடசாலை அதிபரும் தமது மாணவர்கள் தொடர்பான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தாமே பொறுப்புக் கூற வேண்டும்.  மேலதிகாரிகள் கூறும் விடயங்களை அவ்வாறே கேட்டுவிட்டு பாடசாலைகளில் ஒப்புவிக்காது, நன்மை தீமைகள் தொடர்பில் ஆய்வு செய்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
(அன்றைய காலத்தில் பரீட்சைக்கான ஆயத்தமாக லீவு எடுத்து வீட்டில் பலர் படித்திருப்பீர்கள். காலை 4 மணிக்கு எழுந்து உணவருந்தாமல் காலை 10 மணி வரை படித்து, அதன்பின்னர் காலை உணவு பின்னர் கற்றல் எனத் தொடர்ச்சியாக கற்றல் செல்லும், ஆனால் தற்போது காலை 6 மணிக்கு வகுப்பு இதனால் காலை கற்றல் இல்லாமல் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு ஆயத்தப்படுத்துகிறார்கள்.)
ஆனால் தற்போது உள்ள நிலைமை “கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது”.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்