Fri. Mar 29th, 2024

ஆசிரியர்கள் தரக்குறைவானவர்களா? போராட்டத்தில் குதித்த பதிலதிபர்

ஆசிரியர்கள் என்றால் தரக்குறைவானவர்களா? நாகரீகமாக பேசுங்கள் என பதிலதிபர் ஒருவர் போராட்டத்தில் குதித்த சம்பவம் ஒன்று கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது. குறித்த பதிலதிபர் பாடசாலை செல்வதற்காக எரிபொருளை பெறுவதற்கு சென்றுள்ளார். அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தனியாக எரிபொருள் வழஙாகப்பட மாட்டாது. எமக்கு பெற்றோல் தான் வேண்டும் கல்வி தேவையில்லை என எரிபொருள் வாங்க வந்தவர்களால் கோசம் எழுப்பப்பட்டதுடன், ஆசிரியர்களை தரக் குறைவான வார்த்தை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பதிலதிபர்,  ஆசிரியர்கள் என்போரே நாட்டிலுள்ள அனைத்து பதவிகளிலும் இருப்பவர்களை உருவாக்குகிறார்கள்.  அவர்கள் இல்லை என்றால் முதல் எழுத்துக் கூட எழுதத் தெரியாத சமுதாயம் உருவாகும். இதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் எனக் கூறியதுடன், ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாமல் விடப்படுமாயின் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைக்கு செல்வதை நிறுத்தி போராட்டத்தில் குதிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் பின்னர் அங்கு நின்றவர்களால் இதற்கான நிரந்தர தீர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு, குறித்த பதிலதிபருக்கு எரிபொருள் வழங்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடிப்படை தேவையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது, வேலையின்றி பொழுது போக்குக்காகவும் மற்றும் கறுப்பு சந்தையில் எரிபொருளை விற்பனை செய்பவர்களும், எரிபொருள் நிலையங்களில் முன்கூட்டியே வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைத்து விடுகிறார்கள். அத்துடன் எரிபொருள் வழங்கும் நேரத்தில் சிலர் வரிசையை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இது தொடர்பாக பொலீஸார் மற்றும் அதிகாரிகள் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்