ஹாட்வெயார் விற்பனை நிலையம் எரிந்து நாசம். தீ அணைப்பு வாகனம் இல்லாமையால் மன்னாரில் தொடரும் சம்பவங்கள்
மன்னார் உப்புக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் விற்பனை நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாகக் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது .
வழமை போன்று குறித்த விற்பனை நிலையம் நேற்று புதன் கிழமை இரவு மூடப்பட்டதன் பின்னர் இரவு 11 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தின் உள்ளே தீ விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தபோதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை .பின்னர் மன்னார் நகர சபை பௌசர் ஊடாக நீர் கொண்டு சென்று தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறுதியில் ஒருவாறு அருகில் உள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு தீ பரவாமல் அணைக்கப்பட்டது.
இருந்தபோதிலும் குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரி ந்தமையால் பல இலட்சம் ரூபா பெறுமதியானப் பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது .
தீ அணைப்பு வாகனம் இல்லாமையினால் குறித்த தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள். மன்னாரில் இதுவரை மூன்றுக்கு மேற்பட்ட கடைகள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. தீயணைப்பு வாகனம் இருந்திருந்தால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என்று மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்கள் .
தீ விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.