Fri. Jun 21st, 2024

வெந்தயம் டு ஆலிவ் எண்ணெய்.. இளநரையைத் தடுக்க சிம்பிள் டிப்ஸ்!

வெந்தயம் டு ஆலிவ் எண்ணெய்.. இளநரையைத் தடுக்க சிம்பிள் டிப்ஸ்!

`நரைமுடி’ – இளைஞர்களின் மிகப்பெரிய கொடிய கனவு. ஒரு நரைமுடி வந்தாலே போதும், `முதுமையைத் தொட்டுவிட்டோமோ!’ என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு வந்துவிடும். `சால்ட் அண்டு பெப்பர்’ ஸ்டைல் தற்போது ட்ரெண்டானாலும், மனதுக்குள் ஏதோ ஓர் இடத்தில் `டை’ அல்லது `கலரிங்’ செய்துகொள்ளலாமா என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும். இளம் வயதில் நரை முடி வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் பார்க்கலாம்.

இளநரை

மரபணு தாக்கம்:

25 வயதானவர்களுக்கு நரைமுடி வருவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று, மரபணு தாக்கம் எனப் பெரும்பாலான தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களின் தாத்தா அல்லது அப்பாவுக்கு இளநரை தாக்கம் இருந்தால், உங்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

மருத்துவக் காரணங்கள்:

நீண்ட நாள்களாக உடலில் இருக்கும் சளி மற்றும் மலச்சிக்கல், ரத்தசோகை, தைராய்டு சுரபியில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் இளநரை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. Hyperthyroidism மற்றும் Vitiligo போன்ற ஹார்மோன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இளநரை உண்டாகும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு:

முறையற்ற உணவுப் பழக்கங்கள், உடலிலுள்ள ஊட்டச்சத்தின் அளவை மாற்றுகின்றன. இதை, தோல் மற்றும் முடிகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கணிக்கலாம். வைட்டமின் B12, அயோடின், தாமிரம், இரும்புச்சத்து, புரதச்சத்து, அமீனோ அமிலங்கள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் முதலியவை தேவையான அளவில் உடலில் இல்லையென்றால், நரை முடி வரும்.

மாசு:

அதிகப்படியான வெப்பம் மற்றும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட கூந்தல் பராமரிப்புப் பொருள்களை உபயோகிப்பதால், மீண்டும் மீட்டெடுக்க முடியாத அளவுக்குச் சேதமடைகிறது உச்சந்தலை. இளநரைக்கு, புகைப்பழக்கமும் மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று.

மன அழுத்தம்:

நீண்டநாளாக மனஅழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், உடலிலிருக்கும் வைட்டமின் B-யின் அளவு குறையும். இதுவே, நரை முடி ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது.

இந்த இளநரை பிரச்னையை வீட்டில் இருக்கும் சில பொருள்களைக்கொண்டே சரிசெய்யலாம்.

வெந்தயம்:

Fenugreek seeds

வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் மற்றும் அத்தியாவசிய அமீனோ அமிலங்கள் இளநரையைக் கட்டுப்படுத்துகின்றன. 1/2 கப் தேங்காய் எண்ணெயைக் கொதிக்கவைத்து அதில் 1/4 கப் வெந்தயம் சேர்த்து 6-8 நிமிடம் கொதிக்கவிடவேண்டும். சூடு தணிந்து அரை வெப்பநிலைக்கு வந்ததும், வெந்தயத்தை தனியே வடிகட்டி எடுத்துவிட்டு எண்ணெயை மேலும் குளுமைப்படுத்தவேண்டும். இரவில் இந்த எண்ணெயால் மசாஜ் செய்து ஊறவைத்து காலையில் ஷாம்புகொண்டு கூந்தலை அலசலாம். வாரம் இருமுறை இப்படிச் செய்யலாம்.

ஸ்பெஷல் எண்ணெய்கள்:

Special Oils

மார்க்கெட்டில் கிடைக்கும் ஜமைக்கா கறுப்பு ஆமணக்கு எண்ணெய், Black Seed Oil, ஆலிவ் எண்ணெய், ஜோஜோபா (Jojoba) எண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் எண்ணெயை மிதமாகச் சுடவைத்து, உச்சந்தலை முதல் நுனி முடி வரை 15 நிமிடத்துக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, சுடுநீரில் ஒரு துண்டை நனைத்து, தலையைச் சுற்றி இறுக்கமாகக் கட்டி 30 நிமிடங்கள் வரை  ஊறவைத்து, ஷாம்பு கொண்டு தலையை அலசவேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்துவந்தால், இளநரை வருவதைத் தவிர்க்கலாம். சாதாரண எண்ணெய், இளநரையைத் தடுக்கும். ஆனால், Black Seed போன்ற எண்ணெய் தொடர்ந்து உபயோகித்தால், முடியின் நிறத்தையே கருமையாக்கும்.

ஆப்பிள் சீடர் விநிகர்:

Apple Cider Vinegar

தற்போது மார்க்கெட்டுகளில் அதிகம் காணப்படும் ஆப்பிள் சீடர் விநிகர்கொண்டும் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம். இந்த விநிகரிலுள்ள கலவைப்பொருள்கள், தலைமுடி வேர்களில் இருக்கும் மெலனின் நிறமியைப் பாதுகாக்கிறது. முதலில், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் விநிகரோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை, தலையில் ஊற்றி அனைத்து இடங்களுக்கும் படரவிட்டு 20 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு ஷாம்புகொண்டு அலசவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோன்று செய்துவந்தால், இளநரையைத் தடுக்கலாம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்