Fri. Jan 17th, 2025

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – கோத்தபாய நிகழ்வில் முரளீதரன்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொழும்பு ஷங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வியத்கம நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் இலங்கையை அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்பட்டு நாட்டை ஆளவேண்டும் என தெரிவித்தார்

கிரிக்கெட் வீரர்களோ ஏனைய துறைசார் வல்லுனர்களோ நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனைய வல்லுனர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய நபர் ஒருவராலேயே தீர்க்க முடியும் என தெரிவித்தார்

இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று கூறிய அவர் உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவராக இருப்பர் என்றும் தெரிவித்தார்

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர்கள் அப்பாவி மக்களை கொலை செய்தனர். 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்து விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளீதரன் தெரிவித்தார்

போர் முடிவுக்கு வருமுன்னர் நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தோம். அச்சம் என்பது பெரிய விடயம்

1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டு சொத்துக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. எனது தந்தை தாக்கப்பட்டார். அனைவரும் இந்தியாவிற்கு போனார்கள். ஆனால் நாங்கள் அங்கு செல்லவில்லை, நான் இலங்கையன் என்ற ரீதியில் இங்கேயே வாழவிரும்பினோம்.

இந்த யுத்தத்தில் இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கால கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர்.

நாங்கள் கொழும்பிலும் அச்சத்துடனேயே வாழ்ந்தோம், நான் பெலவத்தையில் பிரதேசத்தில் வசித்தவேளை எந்நேரமும் விடுதலைப்புலிகளால் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற பயத்தினால் பாராளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார் .

இதே நிலையில் தமிழர்கழும் அச்சத்துடனேயே வாழ்ந்தனர். நாட்டின் பாதுகாப்பும் மக்களிற்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்பதுமே இந்த தேர்தலில் முக்கியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான ஒரு தலைவரிற்கே நான் வாக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் மூலம் முரளீதரன் பொது மேடையில் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார். இவர் கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலும் இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை மூடிமறைப்பதற்காக பிரச்சாரம் செய்தவர் என்பது தெரிந்ததே. முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை வந்திருந்தபொழுது காணாமல் போனவர்களின் உறவினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பிபிசி செய்திசேவை உட்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்ததுடன், டேவிட் காமெரூனுக்கு கூட இந்த விசயத்தை சொல்லமுற்பட்டவேளை, நாங்கள் விளையாட்டில் கவனத்தை செலுத்துவோம் என்று கமரூன் கூறி இவரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் தகவல்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் இவரது சகோதரனின் சடடவிரோத எதனோல் வியாபாரத்தில் இருந்து கைது செய்யப்படாமல் இருப்பதற்காவே இவர் ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதாக கொழும்பு ஆங்கிலப்பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தது தெரிந்ததே

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்