வலைப்பந்தாட்ட ராணிகளாக வலம் வந்த யாழ் மாவட்ட அணியை வீழ்த்தி வவுனியா மாவட்ட அணி வரலாற்றுச் சாதனை

வடக்கு மாகாணத்தில் வலைப்பந்தாட்டத்தில் ராணிகளாக பல ஆண்டுகளாக சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்த யாழ் மாவட்ட அணியை வீழ்த்தி வவுனியா மாவட்ட அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாவட்ட அணிகளுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் பல ஆண்டுகளாக சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்த யாழ் மாவட்ட அணியை எதிர்த்து துடிப்பான யுவதிகளைக் கொண்ட வவுனியா மாவட்ட அணி களம் இறங்கியது. நான்கு கால் பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் ஒவ்வொரு கால் பகுதி ஆட்டமும் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது. முதலாவது மற்றும் இரண்டாவது கால் பகுதி ஆட்டங்களின் நிறைவில் யாழ் மாவட்ட அணி 9:8, 16:15 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்து நின்றனர். மூன்றாவது கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடி 31:31 என சம புள்ளிகளுடன் காணப்பட்டனர். இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் நான்காவது கால் பகுதி ஆட்டம் இரு அணிகளுக்கும் பெரும் சவாலாக அமைந்தது. இதில் யாழ் மாவட்ட அணி தமக்கு கிடைத்த மத்திய எறிகையை தவறவிட வவுனியா மாவட்ட அணியினர் சிறப்பாக விளையாடி ஆட்ட நேர முடிவில் 43:40 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தனர்.