வன இலாக்கா அதிகாரியின் மூர்க்கத் தாக்குதல்!! -3 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில்-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ரொட்டவெவ பகுதியில் வன இலாகா அதிகாரியின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட குடும்பஸ்தவர் ஒருவர் சிகிச்சைக்காக பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான ஆர். அன்சார் (வயது 60) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
மிரிஸ்வெவ அவரது வீட்டுக்குப் பின்னால் உள்ள வயல்களில் காணப்பட்ட பட்டைகளை வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தபோது வன இலாக்கா அதிகாரி தன்னிடம் வந்து இப்பகுதியிலுள்ள காடுகளை நீதான் வெட்டியுள்ளாய் எனக்கூறி தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து அவரை வன இலாக்கா அதிகாரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது தன்னை தாக்கியதாக கூற முற்பட்டபோது தாக்குதல் நடத்தியதாக கூறினால் தனக்கு பிணை வழங்க முடியாது எனவும் வன இலாக்கா அதிகாரி மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
இதேவேளை பாதிக்கப்பட்டவரின் மனைவி தனது கணவரை தாக்கியதாக தெரிவித்து மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட நபரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இப்பிரதேசத்தில் கடமையாற்றுகின்ற வன இலாகா அதிகாரிகள் தொடர்ச்சியாக வருடா வருடம் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வரும் நபர்களை மிரட்டி பணங்களை அறவிட்டு வருவதாகவும், கடந்த 30 வருடங்களாக தொடர்ச்சியாக சேனை பயிர்ச்செய்கையாளர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சேனை பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு அரசும் அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.