வட நக்கீரன் கிண்ணத்தை தம் வசமாக்கியது வதிரி பொம்மேர்ஸ் அணி
யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன்
வடமராட்சி அல்வாய் நக்கீரன் சன சமூக நிலையத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நக்கீரன் விளையாட்டுக் கழகம் நடத்திய வடமராட்சிக்கு உட்பட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில் வதிரி பொம்மேர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நக்கீரன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் வதிரி பொம்மேர்ஸ் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கியம் பி அணி மோதியது. நான்கு கால் பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் பருத்தித்துறை ஐக்கியம் பி அணியினர் ஆதிக்கம் செலுத்தி 5:2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். ஆனால் அடுத்த மூன்று கால்பகுதி ஆட்டங்களிலும் வதிரி பொம்மேர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நேர முடிவில் வதிரி பொம்மேர்ஸ் அணி 26:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வதிரி பொம்மேர்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்த வி.தாரிகா,

தொடர் ஆட்ட நாயகியாக பொம்மேர்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்த எம்.ஆரணியா,

சிறந்த பேற்றுக்கெய்யும் வீராங்கனையாக பருத்தித்துறை ஐக்கியம் பி அணியை பிரதிநிதித்துவம் செய்த மேரி அனுஷ்கா,

சிறந்த பேற்றுத் தடுப்பு வீராங்கனையாக பருத்தித்துறை ஐக்கியம் பி அணியை பிரதிநிதித்துவம் செய்த கம்ஷிகா,

வளர்ந்து வரும் வீராங்கனையாக திக்கம் இளைஞர் அணியைப் பிரதிநிதித்துவம் செய்த மரீனா,

நன்னடத்தை அணியாக கலைமகள் பி அணியும் தெரிவு செய்யப்பட்டனர்.
நக்கீரன் விளையாட்டுக் கழக தலைவர் இ.தங்கர்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நக்கீரன் விளையாட்டுக் கழக முன்னாள் பயிற்றுவிப்பாளரும், நாயன்மார்கட்டு சரஸ்வதி வித்தியாசாலை அதிபர் செ.மகிந்தன், சிறப்பு விருந்தினர்களாக
நக்கீரன் சன சமூக நிலையத்தின் தலைவர் சி.நிஷான், யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அ.வசந்தன், உடற்கல்வி ஆசிரியர் சி.சிவச்செல்வம், கிராம அலுவலர் சு.வினோத், பருத்தித்துறை பிரதேச செயலக இளைஞர் கழக உத்தியோகத்தர் வ.மனோராஜ், ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனை திருமதி.சுரேஷ் விஜிதா, குச்சம் ஞான வைரவர் தேவஸ்தான தலைவர் ந.உதயகுமார், நக்கீரன் சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்க உப தலைவர் ம.பிரபாகரன், முன்னாள் தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனை திருமதி.ம.பூமகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.