வடமாகாண நீா்வள மாநாடு..! இணைய தளம் அங்குரா்ப்பணம்..
ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அடிப்படையாக இருக்கவேண்டிய பொருளாதார சுதந்திரம் வேண்டும். பொருளாதார சுதந்திரம் இல்லாத எந்தவொரு சமூகமும் எப்போதும் அரசியல் சுதந்திரத்தினை பெறமுடியாது என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வடக்கிற்கான சர்வதேச நீர்வள மாநாட்டிற்கான இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் தலைமையில் இன்று (16) மாலை இடம்பெற்றது.
2030 ஆம் ஆண்டளவில் எமக்கு குடிநீர் தேவையாக தண்ணீரீன் அளவு 80 எம்சிஎம் அளவு மட்டுமே. ஆனால் மழையினால் வருடா வருடம் 1200 எம்சிஎம் கிடைக்கப்பெறுகின்றது. இன்னும் 10 வருடங்கள் சென்ற பின்னரும் நாம் 80 எம்சிஎம் மழையினை எப்படி சேமிக்கலாம்
என்பதே எங்கள் கேள்வியாகவுள்ளது. எனவே எவ்வாறு நீர்முகாமைத்துவத்தினை மேற்கொள்வது என்பதே நம் நோக்கமாகும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார். மக்கள் சார்பான இத்திட்டத்தில் பாமர மக்கள் விவசாயிகள் அவர்களது பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது
அதற்கு நாம் எவ்வாறு முகம்கொடுக்கலாம் ,எதிர்கால சவால்களை எவ்வாறு எதிர்நோக்கலாம் ,என்பது தொடர்பில் எதிர்வரும் 50 வருடங்களிற்கு வடமாகாணத்தில் நீரினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்னும் நோக்காக எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்கள்
வடக்கிற்கான சர்வதேச நீர்வள மாநாடு நடைபெறவுள்ளது என்று ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார். மேலும் , 10000 காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்கும் திட்டத்தில் இதுவரையில் சுமார் 6000 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இதனை நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளோம் என்றும் ஆளுநர் அவர்கள் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் 12 சாரதிகள் மற்றும் 4 வரிமதிப்பீட்டாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் இந்த நிகழ்வின்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், வை.தவநாதன் , ஜெயசேகரன் , புவனேஸ்வரன் , வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் , வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.