வடமாகாண கல்வி அமைச்சின் முன் தீர்வு கோரி பேரணி, அனைத்து ஆசிரியர்கள் பலம் சேர்க்கவும் – இலங்கை ஆசிரியர் சங்கம்
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் நாளை திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன் தீர்வு கோரிபேரணியாக திரளவுள்ளதால் அனைத்து ஆசிரியர்களையும் பலம் சேர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் கேட்டுள்ளார்.
சேவையின் தேவை என்ற பெயரில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பங்களிப்பின்றி வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றத்துக்கு எதிரான போராட்டம் நாளை திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் விளக்கமளிப்பது தொடர்பாக ஊடக அறிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
அதில் ஜே.வி.பி யின் இலங்கை ஆசியர் சேவை சங்கத்தினால் மிகவும் பதற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விளக்கமளிக்க விரும்புகிறது.
எமது தொழிற்சங்க உறுப்பினர்களை என்.பி.பி என்று போலி முலாம் பூசிய ஜே.வி.பி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களான மகிந்த ஜெயசிங்க மற்றும் பிரதி அமைச்சர் பிரதீப் ஆகியோரின் தலையீட்டுடனான அரசியல் தலையீட்டின் மூலம் 2025 இடமாற்றப்பட்டியலில் ஜே.வி.பி யினரால் நடைபெற்றுள்ள அரசியல் பழிவாங்கல்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கும் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கும் எவ்வித தொடர்புமற்ற நிலையில், தமது முகத்திரை நாளைய தினம் கிழிக்கப்படப் போகிறது என்ற பதற்றத்தில் போலியான செய்திகளை பரப்பி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நீதியைக் கூட ஜே.வி.பி தரப்பு கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டம் 2026 ம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் முறைகேடு தொடர்பான போராட்டமே ஆகும்.
அதிலும் ஏற்கனவே வெளிமாவட்ட சேவைகள் மற்றும் வெளிமாவட்டத்துக்கு ஒத்த சேவைகளை (தீவகம், வடமராட்சி கிழக்கு) ஆற்றிய பல நூறு ஆசிரியர்கள், ஜே.வி.பி யின் ஆசிரியர் சங்கத்தாலும், வடமாகாண கல்வி திணைக்களத்தாலும் பழிவாங்கலுக்குட்படுத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நீதி கோரவுள்ள போராட்டமாகும்.
இடமாற்ற முறைகேடுகள் தொடர்பாகவே, நாளைய தினம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் போராட்டம் நடைபெறவுள்ளது.
அதுவும், பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டமாகும்.
ஜே.வி.பி அரசாங்கம் தமது அரசியல் பழிவாங்கல்களையும், அரசியல் தலையீடுகளையும் மூடி மறைக்கும் பகீரத பிரயத்தனத்தில் அமைச்சர் சந்திரசேகரனின் பிரத்தியேக ஆளணியில் செயற்படும் ஆசிரியர் சேவை சங்கத்தின் செயற்பாட்டாளர்களால் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்க முயல்கின்றனர்.
நாளைய தினம் போராட்டத்தில் பங்குபெறும் ஒவ்வொரு ஆசிரியர்களாலும் ஜே.வி.பி ஆசிரியர் சங்கத்தின் முறைகேட்டு ஆதாரங்களை அம்பலப்படுத்தவுள்ளோம்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் முறைகேடுகளுக்கு எதிராக ஆசிரியர்களின் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஜே.வி பி யின் ஆசிரியர் சங்கம் தற்போது பதற்றப்பட்டு அறிக்கை விடுவதன் மூலம் அவர்களின் தலையீடு எந்தளவுக்கு வடமாகாண கல்வி திணைக்கள இடமாற்றத்தில் அமைந்துள்ளது என்பது நன்கு வெளிப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
