வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ஆளுநருடன் சந்திப்பு
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு மற்றும் ஆசிரியர் ஆளணிச் சீராக்கம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும்
இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினரால் வடக்கு மாகாணத்தின் கல்விச் செயற்பாடுகள், ஆசிரிய பரம்பலைச் சீராக்குதல், முன்பள்ளிக் கல்வி முதல் உயர்தர கல்வி வரை சீராக்கம் செய்வது தொடர்பான விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக ஆசிரிய இடமாற்றங்களில் ஏற்படும் முரண்பாடுகள் அவை தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பாக ஆதாரங்களுடன் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் ஆசிரிய ஆளணிச் சீராக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆசிரியர்கள் தொடர்பான தரவுகள் அதிகாரிகளிடம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படாமை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது என்றும் ஆசிரிய சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது
“சேவையின் தேவைகருதிய இடமாற்றம்” எனும் சொற்பதம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும்,
மாணவரின் கல்வி நலன்களைப் புறந்தள்ளி இவை நடைபெறுக்கின்றன என்பதையும் சங்கம் சுட்டிக்காட்டியதோடு, இன்னும் பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ம. சசிகுமார்,
நிதிச் செயலாளர் கி. இந்திரன் துணைப் பொதுச் செயலாளர் த. தயாபரன், துணைத் தலைவி திருமதி.ஜெ.சசிரேகா, துணைத் தலைவி திருமதி. அ.புனிதசீலி,
கல்வி, கலாசார செயலாளர் நா.கேதீஸ்வரன், வடமாகாணச் செயலாளர் வி. ஜெயரூபன். ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் கௌரவ ஆலோசகர் சரா.புவனேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.