வடமாகாண எல்லே பரபரப்பான ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன்
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான எல்லே போட்டியின் இறுதியாட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய அணி 40 பந்துகளில் 11 இலக்குகளை இழந்து 10 ஓட்டங்களை பெற்றனர்.
அவ்வணி சார்பில் விதுசன் 3, கவிஜன், டினுஜன் ஆகியோர் தலா இரு ஓட்டங்களையும், கெளசிகன், லக்சன், கர்ஷாந் ஆகியோர் ஒவ்வொரு ஓட்டங்களையும் பெற்றனர்.
மிகப் பெரிய வெற்றி இலக்கை நோக்கி நெல்லியடி மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாடியது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் லதுசனின் அபாரமான துடுப்பாட்டத்தால் 25 பந்துகளில் 6 இலக்குகளை இழந்து 11 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அவ்வணி சார்பில் லதுசன் 5 ஓட்டங்களையும், பிரவீன், யதுசன் ஆகியோர் தலா இரு ஓட்டங்களையும், சானுசன் சிவகுமாரன் ஆகியோர் ஒவ்வொரு ஓட்டங்களையும் பெற்றனர். 2024 ஆம் ஆண்டு சிறந்த எல்லே வீரராக நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் யதுசன் தெரிவு செய்யப்பட்டார்.