வடமராட்சி சிரேஷ்ட வீரர்களுக்கான கால்பந்தாட்ட பிறீமியர் லீக் கிண்ணம் அண்ணாசிலையடி லெஜென்ஸ் எவ்.சி. வசம்
வடமராட்சி சிரேஷ்ட வீரர்களுக்கான கால்பந்தாட்ட பிறீமியர் லீக் கிண்ணத்தை அண்ணாசிலையடி லெஜென்ஸ் எவ்.சி. அணி தமதாக்கிக் கொண்டனர்.
வடமராட்சி சிரேஷ்ட வீரர்களுக்கான கால்பந்தாட்ட பிறீமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில்
டைமன்ஸ் எவ்.சி அணியை எதிர்த்து அண்ணாசிலையடி லெஜென்ஸ் எவ்.சி. அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் டைமன்ஸ் எவ்.சி. அணியினருக்கு இரு வாய்ப்புகள் கிடைத்த போதிலும் கோலாக்க தவறி விட்டனர். இதனால் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இரண்டாவது பாதியாட்டத்தில் ஆட்டம் ஆரம்பமாகி முதலாவது நிமிடத்தில் அண்ணாசிலையடி லெஜென்ஸ் எவ்.சி. கோல் காப்பாளர் பெற்றுக் கொண்ட பந்தை அடித்த போது எதிரே நின்ற டைமன்ஸ் அணி வீரர் ராஜா காலில் பட்டு கோலாக மாறியது. அதனைத் தொடர்ந்து டைமன்ஸ் எவ்.சி. அணி வீரர்களான ராஜா மற்றும் ரமணன் ஆகியோர் தமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டனர். இருப்பினும் அண்ணாசிலையடி எவ்.சி. அணி வீரர் அனுராகாந்தன் தட்டிக் கொடுத்த பந்தை லங்கேஸ்வரன் மிகச் சிறப்பான கோலைப் பதிவு செய்ய ஆட்டம் விறு விறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது.

டைமன்ஸ் எவ்.சி. அணியினர் பல நிமிடங்கள் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் மேலதிக கோல்களை பதிவு செய்ய முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் அண்ணாசிலையடி லெஜென்ஸ் எவ்.சி. அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதில் தொடர் ஆட்ட நாயகனாக டைமன்ஸ் எவ்.சி. அணி வீரர் ராஜ்,

ஆட்ட நாயகனாக அண்ணாசிலையடி லெஜென்ஸ் எவ்.சி. அணி வீரர் லங்கேஸ்வரன்,

சிறந்த கோல் காப்பாளராக டைமன்ஸ் எவ்.சி. அணி வீரர் பாலா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
வடமராட்சி சிரேஷ்ட சங்கத்தின் தலைவர் கு. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சுதன் மெக்கானிக் சென்ரர் உரிமையாளர் இ.சுதன் மற்றும் சாருஜன் மோட்டோர்ஸ் உரிமையாளர் க. சிவகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.