Sat. Dec 7th, 2024

வடமராட்சி உணவகங்கள் மீது சோதனை நடவடிக்கை, முற்கூட்டியே கசிந்த தகவல்கள்..

பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரைக்கமைவாக வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் நேற்றய தினம் (24) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை முதல் நெல்லியடி வரையுள்ள உணவு மற்றும் மருந்தகங்களில் இடம்பெற்றது. இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்டது

இதன்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் அதிகமான உணவகங்களில் நீண்டநேரம் சூடான நிலையில் வைத்திருப்பதற்காக ரொட்டி போன்ற உணவுகள் றெஜிபோம் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன.
மேலும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் மயிர்க்கொட்டி, குளவிக்கூடு , பூச்சி புழுக்கள் மற்றும் சிலந்தி வலை என்பன காணப்பட்டதுடன் சமைத்த, சமைக்காத உணவுகள் குளிர்சாதனப் பெட்டியில் ஒன்றாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சில உணவகங்களில் குப்பைத் தொட்டிகள் மூடியற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன் சமைத்த உணவுகள் மூடப்படாத நிலையிலும் வெளிச்சமற்ற நிலையிலும் வைக்கப்பட்டிருந்தது
மேலும் சில உணவகங்களில் மிகவும் அழுகிய நிலையில் மரக்கறி வகைகள் சமைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இவை பின்னர் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டன. அத்துடன் பலகடைகளில் இலையான்கள் அதிகளவில் இருந்தமை அவதானிக்கமுடிந்தது.

இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது 06 உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருவதுடன் 05 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்த உணவுகள் அழிக்கப்பட்டன.
மருந்தகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது பெரும்பாலான பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் அற்ற நிலையில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், சில மருந்தகங்களில் மருந்தாளர்கள் எவரும் இல்லாதிருந்தமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்கூட்டியே சில உணவகங்களுக்கு தெரிந்திருந்ததாகவும் , இதனால் அவர்கள் தயார் நிலையில் இருந்ததாகவும் உணவக ஊழியர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த தகவல்கள் அதிகாரிகளால் கசிய விடப்பட்டனவா அல்லது சோதனை இடம்பெற்ற உணவகங்களில் இருந்து முற்கூட்டியே தெரியவந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்