வடக்கில் சூறாவளி எச்சரிக்கை
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள பிபார்ஜோய் (Biparjoy) சூறாவளி மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாண்டுக்கான தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இலங்கைக்கு குறிப்பாக இலங்கையின் தென்மேற்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு நேற்று முன்தினம்( 05.06.2023) வந்தடைந்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாண்டு எல்நினோ ஆண்டாக இருக்கின்றமையால் சராசரி மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் செறிவான மழைவீழ்ச்சி குறைவான நாட்களில் கிடைக்கும் என்பதனால் இவ்வாண்டும் இலங்கையின் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா மாகாணங்களுக்கு மூன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வெள்ள அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கு ( மழைவீழ்ச்சி அளவைப் பொறுத்தே) வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தற்போது அரபிக்கடலில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ‘பைபர்ஜோய்’ என பெயரிடப்படும். இது பங்களாதேஷ் வைத்த பெயராகும். இந்த புயல் எதிர்வரும் 10.06.2023 க்கு பின்னர் இந்தியாவின் கேரளாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலினால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியான பாதிப்பும் கிடையாது. ஆனால் இன்று முதல் இலங்கையின் மேற்கு, தென்மேற்கு, வடமேற்கு, மற்றும் மத்திய மலைநாட்டு பகுதிகள் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் வட மேற்கு, மேற்கு, தென்மேற்கு,தெற்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இப்பிரதேசங்களில் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புவது அவசியம். அதே சமயம் முறையான அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. அதே சமயம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகளும் எதிர்வரும் நாட்களில் வழமையை விட உயரம் கொண்ட அலைகளைக் கொண்டிருக்கும் என்பதனால் இப்பிரதேச மீனவர்களும் அவதானமாக இருப்பது அவசியமாகும் எனவும் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.