ரட்ணசபாபதி சுழல் கிண்ணத்தை இரண்டாவது முறையாகவும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி சுவீகரித்தது

ரட்ணசபாபதி சுழல் கிண்ணத்தை இரண்டாவது முறையாகவும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி கைப்பற்றினர்.
நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட ரட்ணசபாபதி சுழல் கிண்ணத்திற்கான போட்டி நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இரண்டாவது பாதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரி வீரர் ஒருவரினால் அடிக்கப்பட்ட பந்து பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பின்கள வீரரை மேலாக தாண்டிச் செல்ல அதனை நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் தருண் அதனை லாவகமாக கோலாக்கி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். ஆனால் சற்றும் சளைக்காமல் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி வீரர்கள் போராடினர். இதனால் ஆட்ட நிறைவடைவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும் போது நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணிக்கு தண்டனை உதை கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அவ்வணி வீரர் பவநீதன் கோலாக்கி கோள்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது. அதன் பின்னர் இரு அணிகளாலும் மேலதிக கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரட்ணசபாபதி சுழல் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இதில் சிறந்த ஆட்ட நாயகனாக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி வீரர் பவநீதன் தெரிவு செய்யப்பட்டார்.