ரட்ணசபாபதி கிண்ணம் ஹாட்லிக் கல்லூரி ஹெற்றிக் சாதனை
ரட்ணசபாபதி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஹெற்றிக் சாதனை படைத்து சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
கல்லூரிகளின் சமர் என வர்ணிக்கப்படும் நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் ஹாட்லிக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான ரட்ணசபாபதி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் முதல் பாதியாட்டம் நிறைவடைவதற்கு 30 செக்கன்கள் இருக்கும் போது ஹாட்லிக் கல்லூரி இரு வீரர்கள் பேற்றுப் பிரதேசத்தில் வைத்து அடித்த போதும் நெல்லியடி மத்திய கல்லூரி கோல்காப்பாளரினால் தடுக்கப்பட்ட போது மீண்டும் அந்த பந்தை ஹாட்லிக் கல்லூரி வீரர் பிரவீன் கோலாக்க முதல் பாதியாட்டத்தில் ஹாட்லிக் கல்லூரி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இதனால் இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. இருப்பினும் மேலதிக கோல்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். நான்காவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் கடந்த மூன்று போட்டிகளும் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஆட்ட நாயகனாக பிரவீன்,

சிறந்த கோல் காப்பாளராக விகாஷ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.