யா/ கணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபரை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் அமைந்துள்ள யா/ கணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபரை நியமிக்குமாறு கோரி அப்பகுதி மக்களால் கையொப்பம் வழங்கப்பட்டு வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை முன்றலில் பெற்றோர் மற்றும் பொதுமக்களால் கையொப்பங்கள் இடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் அமைந்துள்ள யா/ கணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயம் நூற்றாண்டு கடந்த கல்விப் பாரம்பரியம் மிக்க ஆரம்ப பாடசாலையாகும். சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் பணியாற்றிய அதிபர் ஆ. வினோதன் அவர்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் திகதி மாற்றலாகி சென்றதையடுத்து, கடந்த ஐந்து மாதங்களாக நிரந்தர அதிபர் இன்றி சிரேஸ்ட ஆசிரியர் ஒருவர் பதிலதிபராக கடமையாற்றி வருகிறார்.

இப்பாடசாலைக்கான புதிய அதிபரை தெரிவு செய்ய நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானாலும் இதுவரை நியமனம் வழங்கப்படாத நிலை தொடர்கிறது.
இந்நிலையில், பாடசாலையின் நிர்வாகம், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்து செல்லும் நோக்கில் விரைவாக புதிய அதிபரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை முன்பாக கையெழுத்து வேட்டை ஒன்றை முன்னெடுத்தனர்.
ஆளுநருக்கு மகஜர் கையளிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் பெற்றோர்கள், மத தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் வடமராட்சி கல்வி வலய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, அதிபர் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளதாகவும், தேர்வு செய்யப்பட்டவரை மத்திய கல்வி அமைச்சிலிருந்து விடுவித்து பெறுவதில் ஏற்பட்ட சிரமங்களே நியமனத் தாமதத்திற்குக் காரணமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பிறிதொரு பொருத்தமான அதிபரை நியமிப்பதற்கான அனுமதியை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து பெற்றவுடன், குறித்த பாடசாலைக்கு உடனடியாக புதிய அதிபர் நியமிக்கப்படுவார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.