யாழ் மாநகர சபைக்கான மண்டபத்துக்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல்லைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (7) நாட்டி வைத்து நடுக்கல்லையும் திரைநீக்கம் செய்துவைத்ததார்.
யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் சுமார் 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நகர அபிவிருத்தி அமைச்சின் நிதியில்அ மைக்கப்படவுள்ளது.
பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சபிக்க ரணமாக்கத் தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,பாராளுமன்ற உறுப்பினர் தர்ம லிங்கம் சித்தார்த்தன், யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் முதல்வரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இந்த நிகழ்வில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ,வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா உட்பட , மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கு பற்றியிருந்தனர்.
உள்நாட்டு போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மண்டபம் அழிவடைந்த நிலையில் கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மீண்டும் யாழ்ப்பாண மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதி நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படுகின்றது