யாழ்ப்பாண குடிநீர் பிரச்சனைக்கு 29ம் திகதி தீர்வு
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர்ப் பிரச்சினைத் தீர்வுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் குடிநீர்த் திட்டப் பணிகள் எதிர்வரும் 29ஆம் திகதி
ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பணியைஅரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இதனை ஆரம்பித்து வைக்கவுள்ளார். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம்
நிறைவடைய வேண்டிய இந்தத் திட்டம் வன உயிரிகள் திணைக்களத்தின் முட்டுக்கட்டையால் ஓராண்டு தாமதமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் குடிதண்ணீர்ப்பிரச்சினை நீண்ட காலமாக பலதரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றது. அதற்குப் பல்வேறு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. இரணைமடுவிலிருந்து
குடிதண்ணீரைக் கொண்டு வருதல், வடமராட்சி கிழக்கிலிருந்து கடல் நீரை நன்னீராக்குதல் என்று பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டபோதும், அதிலுள்ள அரசியல் இழுபறிகள் காரணமாக எந்தவொரு திட்டமும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவி ல்லை என்பதே உண்மை. இந்த நிலையில் ‘மாற்றுக் குடிநீர்த் திட்டம்’ என்ற பெயரில், வடமராட்சி நீரேரியில் உள்ள நீரை குளத்தில் தேக்கி விநியோகிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் வீதியில் ஆறாவது மைல் கல்லுக்கும் ஒன்பதாவது மைல் கல்லுக்கும் இடையிலான பிரதேசத்தில், உப்பாறு நீரேரியில், கப்பூதுவெளி அந்தணத் திடல் பகுதியில் மிகப் பெரிய குளம் அமைக்கப்படவுள்ளது. இந்தக் குளம் 6 சதுர கிலோமீற்றர் பரப்புடையதாகவும், 7.5 மீற்றர் உயரம் உடையதாகவும், குளத்தின் அணைக்கட்டு 4 மீற்றர் அகலம் உடையதாகவும் இருக்கும்.
வடமராட்சி நீரேரியிலிருந்து மழை காலத்தில் கடலுக்குச் செல்லும் நீர், சாவகச்சேரி – பருத்தித்துறை வீதிக்கும், வல்லை வெளிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வடமராட்சி நீரேரியில், அணை அமைக்கப்பட்டு புதிய துருசு நிறுவப்பட்டு அங்கு தடுக்கப்பட்டு, குழாய்கள் மூலமாக அந்தணத் திடல் பகுதியிலுள்ள குளத்துக்கு நீர் இறைக்கப்படும்.
குளத்தில் 4.5 மீற்றர் உயரத்துக்கே இயந்திரம் ஊடாக இறைக்கப்பட்டு நீர் தேக்கப்படும். குளத்துக்கு நேரடியாகக் கிடைக்கும் மழை நீரும் அதனுள் தேக்கப்படும். குளத்தில் சராசரியாக ஆண்டுக்கு 24 எம்.சி.எம். நீர் சேமித்து வைக்கப்படும். வடமராட்சி நீரேரியில் மழை நீர் சேகரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அந்த நீரேரி நன்னீர் நீரேரியாக மாறும் வகையில் திட்டம் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் நாகர்கோவில் பிரதேசத்தில் மங்குரோஸ் தாவரங்கள் அழிவடையும் எனத் தெரிவித்து வனஉயிரிகள் திணைக்களம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்திருந்தது.
தற்போது நீரேரி ஊடாக கடலுக்குச் செல்லும் மேலதிக நீரையே குளத்துக்கு இறைக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் நீரேரியில் உள்ள நீர்
வழமைபோன்றே இருக்கும். இந்தத் திட்டத்துக்கான அலுவலகம் சரசாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்வரும் 29ஆம் திகதி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.