மைத்திரியின் அதிரடி உத்தரவு!!
நாட்டில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்ட திருத்தங்களையும், அது தொடர்பான புதிய சட்டங்கள் வகுப்பதையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு பற்றிய மேற்பார்வை குழுவின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என்பதுடன், அத்தகைய தீர்மானங்களை தேவையான சந்தர்ப்பங்களில் உடனுக்குடன் மேற்கொள்வது மிக முக்கியமாகும் எனவும், இந்த கூட்டத்தின் போது ஜனாதிபதி கூறினார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாடு எதிர்நோக்க நேர்ந்த துன்பியல் சம்பவம் மீண்டும் ஒருமுறை நாட்டில் ஏற்படுவதற்கு இடமளிக்காதிருப்பதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றவோ அல்லது பங்குபற்றாதிருக்கவோ தமது விருப்பிற்கேற்ப செயற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சட்டமா அதிபர் தனக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ஏப்ரல்21 தாக்குதலின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்றினால் சில முன்மொழிவுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை உருவாக்குதல் தொடர்பில் கண்டறியும் பொறுப்பு இந்த குழுவிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பினை முதன்மைப்படுத்திய குடிவரவு, குடியகல்வு செயற்பாடுகள், பயங்கரவாதத்திற்கு நிதி உதவியளித்தல், இணையத்தினூடான பிரகடனங்கள், பொய் பிரசாரங்கள், சைபர் பாதுகாப்பு, கற்கை முறைகள் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த 15 பிரிவுகளின் கீழ் விடயங்களை கண்டறிந்து, வெகுவிரைவில் நாடாளுமன்றில் அறிக்கையொன்று இக்குழுவினரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, அஜித் பீ.பெரேரா, ஆசு மாரசிங்க, பாதுகாப்பு செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் இந்த குழுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.