Sat. Jun 14th, 2025

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் ஜெ.றொ.அன்சன் உளவளத்துறை மாணவன். தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.(NISD)

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்

ஜெ.றொ.அன்சன்
உளவளத்துறை மாணவன்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.(NISD)

கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை. அது ஒரு முழுமையான மனிதனை உருவாக்கும் ஒரு சக்திவாய்ந்த சாதனமாகும் என்பதால் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாணவரும் ஒரே மாதிரியான கற்றல் முறையிலும் வேகத்திலும் இருப்பதில்லை. சில மாணவர்கள் புத்திசாலிகள், விரைவில் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஆனால் சிலர் மெதுவாகக் கற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்கிறார்கள். இந்த வகை மாணவர்களே “மெல்லக் கற்போர்” எனப்படுவர்.

மெதுவாகக் கற்றுக்கொள்ளும் மாணவர் என்றால், குறைந்தபட்சமான அறிவாற்றல் கொண்டிருக்கும், ஆனால் தனித்துவமான கற்றல் முறையை தேவைப்படுத்தும் மாணவர்களாவார். இவர்களுக்கு இயற்கையாகவே ஒரே நேரத்தில் பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், இவர்களிற்கு முறையாக தொடர் பயிற்சி அளிக்கும்போது, நல்ல புரிதலை ஏற்படுத்த முடியும்.

இவர்கள் பாடங்களைப் புரிந்து கொள்ள, நினைவில் வைத்திருக்க சிரமப்படுகின்றனர். மேலும் இவர்கள் எழுத்து மற்றும் வாசித்தல் திறன்களில் பின்தங்கும் நிலையும் காணப்படுகின்றது. இதனால் அவர்கள் தம் தேர்வுகளில் எதிர்பார்த்த பெறுபேறுகளை அடைய முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதனால் மெல்லக்கற்கும் மாணவர்களிடையே தன்னம்பிக்கை குறைபாடு, மன அழுத்தம், பயம், வருத்தம், தனிமை போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.

மேலும் இவர்கள் தம்மை பிறருடன் ஒப்பிட்டு கவலையடைகின்றனர்,
இவர் தொடர்பில் பெற்றோர்களினதும்,
ஆசிரியர்களினதும் புரிதலின்மை, வகுப்பறையில் தனிப்பட்ட கவனிப்பின்மை மற்றும் சமூக ஒதுக்கீடு என்பவற்றாலும் இவர்கள் மேலும் சிரமப் படுகின்றனர்.

இத்தகைய மாணவர்கள் அதிக உணர்வுபூர்வமானவர்கள். அவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாங்கள் ‘திறமையற்றவர்கள்’ என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களின் மனநிலையை பாதிக்கிறது. மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது அவர்களுடைய சமுகப் பழகும் திறனையும் குறைக்கும். இதனால் பாடசாலை இடைவிலகல், தவறான நட்பு வட்டம், மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆபத்துகளும் உருவாகும்.

தற்காலத்தில் மெல்லக்கற்கும் மாணவர்களின் திறன்களை மதித்து, அவருக்கேற்ப தனிப்பட்ட பாடத் திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நேர்மறை ஊக்கம், படிப்படியான கற்றல், செயல் அடிப்படையிலான பயிற்சிகள் மூலமாக அவர்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது.

ஆசிரியர்கள் பொறுமையுடனும் பரிவுடனும் கற்றல் சூழல் ஏற்படுத்துதல், ஒளிப்படங்கள், விளக்கப்படங்கள், விளையாட்டுப் பாடங்கள் போன்றக் காட்சி வழி கற்றல் முறை என்பன மூலம் மெல்ல கற்கும் மாணவர்களின் வளர்ச்சியில் பங்களிக்க முடியும். மேலும் பெற்றோர் இம் மாணவர்களை ஆதரித்து அவர்களின் சிறிய முன்னேற்றத்திற்கே கூட பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தல் மூலம் தம் பங்களிப்பை வழங்க முடியும்.

மெல்லக்கற்கும் மாணவர் வாழ்வில் மனநல ஆலோசகர்களின் பங்கும் மிக முக்கியமானது. மாணவரின் எதிர்மறை எண்ணங்களை மாற்றுவதற்கான பயிற்சி, கவனத்தை ஒரே இடத்தில் வைத்திருக்கும் பயிற்சி, மன அழுத்தம் குறைக்கும் பயிற்சிகள் மற்றும் சமூகத் தோழமையை ஏற்படுத்தல் என்பவற்றின் மூலமும், பயிற்சி முகாம்கள், செயல்முறை வகுப்புகள், திறன்கள் மேம்பாட்டு பட்டறைகள் மூலமும் மெல்லக் கற்போருக்கு உதவ முடியும்.

தற்போது அரசாங்கம் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் தனிச்சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் இம் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மெதுவாகக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் கல்வி உலகத்தில் பின்தங்கியவர்கள் அல்ல. அவர்கள் சிறிது கூடுதல் நேரம், இலகுவான அணுகுமுறை மற்றும் ஆதரவு மூலம் தங்களது முழுமையான திறமைகளை வெளிப்படுத்த கூடியவர்கள். அவர்களின் வளர்ச்சி அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சி மட்டுமல்ல சமூகத்தின் வளர்ச்சியும் ஆகும். ஒவ்வொரு மாணவரும் தனிச்சிறப்புடையவராகவே இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், கல்வி நிர்வாகியும் உணர வேண்டும். யாருக்கும் கல்வியில் பின்தங்கும் உரிமையில்லை, கல்வி ஒவ்வொரு தனிநபருக்குமான உரிமை.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்