முஸ்லிம்களை தனது வெற்றிக்காக அரவணைக்க கோத்தா பகீரத முயற்சி
என்னை பற்றி மக்கள் மத்தியில் சிலரால் முன்னெடுத்து செல்லப்படும் தவறான பிரசாரங்களும், பொய்யான கருத்துக்களும் முஸ்லீம் மக்கள் மத்தியில் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர் முஸ்லிம் மக்கள் அவ்வாறான அச்சத்திலிருந்து மீண்டு தன்னுடைய முழுமையான வெற்றியின் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று நாம் பல்வேறு விடயங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அந்த வெற்றிகளில் அனைவருக்கும் பங்குண்டு. கடந்த 10 வருடங்களுக்கு அமைதியான சூழலை நாம் ஏற்படுத்தியிருந்தோம். எனினும் தற்போது அந்த அமைதியான சூழல் மாற்றமடைந்துள்ளது .
நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினையால் தான் அண்மையில் நாட்டில் பாரிய குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன . பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாகும். இவ்விடயத்தில் தமிழ் , சிங்களம் , முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது.
மீண்டும் பாதுகாப்பான நாட்டை உருவாக்க எங்களால் முடியும். இதுவே எமது பிரதான இலக்காகும். அதற்கமைய நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான முழுமையான சூழலை நாம் ஏற்படுத்தி கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.