முதன்முறையாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை – பலரும் பாராட்டு
க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் இலவசமாக முன்னோடிப் பரீட்சை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோண் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் கணித, விஞ்ஞான பிரிவு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கே இந்த முன்னோடி பரீட்சை நடைபெறவுள்ளது.
இவ்வளவு காலமும் தொண்டைமானாறு வெளிக்கள கல்வி நிலையத்தால் வடக்கு மாகாணத்தில் இப்பரீட்சைகள் நடைபெற்றது. பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவும், கல்வியை நிறுவனமயப்படுத்தும் நோக்குடனும் இந்த முன்னோடி பரீட்சை கணித, விஞ்ஞான பிரிவு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேசிய பரீட்சைக்கான முன்னாயத்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பாடசாலை ரீதியாக பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களிடமும் கட்டணம் எதுவும் அறவிடப்படாமல் இப்பரீட்சை நடைபெறும்.
பாடசாலைகளில் பரீட்சை நிலையங்களை அமைத்து உரிய ஏற்பாடுகளில் பரீட்சையை நடாத்துவதுடன் குறித்த பரீட்சை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் வலயக் கல்விப் பணிப்பாளரிடமோ அல்லது நேரடியாக மாகாண கல்விப் பணிப்பாளராகிய என்னிடமோ தொடர்பு
கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.