மீண்டும் ரணில்- சஜித் இன்றிரவு அலரி மாளிகையில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான மேலுமொரு சந்திப்பு இன்று இரவு 9.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பும் இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர் சஜித் அகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்றைய சந்திப்பில் சபாநாயகர் கருஜெயசூரிய கலந்து கொள்ள மாட்டார் என்று அறியவருகின்றது . இன்றைய பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் தீர்மானம், கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதே நேரம் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை பாராளளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதனை தொடர்ந்து கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் இடம்பெறும் என்றும் அதன் முடிவில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது