யாழ் மாவட்ட மட்ட கிரிக்கெட் – கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன்

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட விளையாட்டு பிரிவினால் நடத்தப்பட்ட யாழ் மாவட்ட ரீதியான கடினப்பந்து T-20 கிறிக்கெற் இறுதிப் போட்டியில் கோப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட விளையாட்டு பிரிவினால் நடத்தப்பட்ட யாழ் மாவட்ட ரீதியான கடினப்பந்து T-20 கிறிக்கெற் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து நல்லூர் பிரதேச செயலக அணி மோதியது.
முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கோப்பாய் பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றனர்.
அவ்வணி சார்பில் கே.கோமைந்தன் 45, ஏ.அன்புயன் 39, எஸ்.நிரோஜன் ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் நல்லூர் பிரதேச செயலக அணி சார்பில் யு.கேதீஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நல்லூர் பிரதேச செயலக அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் வி.தேனுஜன் 55, கே.ராகவன் 31 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் கோப்பாய் பிரதேச செயலக அணி சார்பில் பி.கிரிஷோத் 4, விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிறந்த துடுப்பாட்ட வீரராக நல்லூர் பிரதேச செயலக அணி வீரர் வி.தேனுஜன், சிறந்த பந்து வீச்சாளராக கோப்பாய் பிரதேச செயலக அணி வீரர் பி.கிருஷோத், சிறந்த களத் தடுப்பாளராக கோப்பாய் பிரதேச செயலக அணி வீரர் வை.சங்கீதன், சிறந்த ஆட்ட நாயகனாக கோப்பாய் பிரதேச செயலக அணி வீரர் கே.கோமைதன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளனுமாகிய
செல்லத்துரை திருமாறன் (பிரபு) அவர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி சிறப்பித்திருந்தார்.