மலையகத்தில் பேரவலம் – தகர கொட்டிலுக்குள் வெள்ளதுடன் மாணவர்கள்!
பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன என்று மலையக அரசியல் வாதிகள் மார்தட்டினாலும், சில பாடசாலைகள் சற்றேனும் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். சில செல்வாக்குள்ள பாடசாலைகளும் அரசியல் வாதிகளின் தொடர்புகள் உள்ள பாடசாலைகளும் தேவைக்கு அதிகமாக வளங்களை கொண்டிருக்கையில், சில பாடசாலைகள் சுத்தமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளன.
எனவேதான் இன்றைய நவீன யுகத்திலும், ‘ஸ்மார்ட் வகுப்பறை’ பற்றி பேசப்படும் இக்காலகட்டத்தில் இப்படியும் ஒரு வகுப்பறையா? என்று சொல்லக்கூடிய நிலையில் , தகர கொட்டில்களுக்குள் இருந்து கல்வி பயிலவேண்டியே அவல நிலை நமுனுகல பகுதியிலுள்ள மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இப்பாடசாலையில் மட்டுமல்ல மேலும் பல பாடசாலைகளிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது என்று மலையக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
கல்வி இராஜாங்க அமைச்சராக ஒரு தமிழர் இருந்தும் கூட , தமிழ் பகுதிகளில் இப்படியான நிலைமை தொடர்வது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்