மடு மாதா சவால் கிண்ணம் சம்பியனாகியது சென்ஜோசப் அணி
மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மடு மாதா சவால் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் சென்ஜோசப் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
இதன் இறுதியாட்டம் நேற்று முத்தரிப்புத்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் முத்தரிப்புத்துறை சென்ஜோசப் அணியை எதிர்த்து ஆண்டாங்குளம் சென்தோமஸ் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் இரு அணிகளாலும் பல நிமிடங்கள் கோல் எதனையும் போட முடியவில்லை. இருப்பினும் 18வது நிமிடத்தில் சென்ஜோசப் அணி வீரர் ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் சென்ஜோசப் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்தினர்.12வது நிமிடத்தில் சென்தோமஸ் அணி வீரர் ஒரு கோலைப் போட ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடத்தில் இரு அணிகளாலும் மேலதிக கோல் எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது தீர்மானிக்கப்பட்டது. இதில் முத்தரிப்புத்துறை சென்ஜோசப் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்