Sat. Jul 13th, 2024

போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் போது மூளையை ஏமாற்றி வாழ்க்கைத் திறன்களைச் சிதைத்து ஆளுமையற்ற மனிதனாக மாற்றிவிடுகிறது என மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் போது
மூளையை ஏமாற்றி வாழ்க்கைத் திறன்களைச் சிதைத்து
ஆளுமையற்ற மனிதனாக மாற்றிவிடுகிறது என
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும்போது அது எமது மூளையை ஏமாற்றி சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வாழ்க்கைத்திறன் பண்புகளைச் சிதைத்து ஆளுமையற்ற மனிதர்களாக மாற்றிவிடுகிறது. இதனால் சுயமரியாதையற்ற, தனிநபர் சுகாதாரம் குலைந்த, சமூகப் பிறழ்வு நடத்தையுடைய சமூகவிரேத செயற்பாடுகளில் ஈடுபடும் சமூகமொன்று உருவாகிவருகிறது.
அண்மையில் போதைப்பொருள் துஷ்பிரயோகத் தடுப்பு நிகழ்வுகள் முழங்காவில் மகாவித்தியாலயம் மற்றும் ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டபோது அதில் வளவாளராகக் கலந்துகொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனை மூளையில் “டோப்போமின்” எனும் மகிழ்வைத்தூண்டும் ஓமோனையும், உடலில் “அதிரினலின்” எனும் உடலை சண்டைக்குத் தயாராக்கும் ஓமோனையும்  அதிகளவில் சுரக்கச் செய்து அதை இயல்பான நிலை போன்று மூளையை ஏமாற்றுவதால் அதை மூளை மீண்டும்மீண்டும் எதிர்பார்க்கும். அத்துடன் பாவிக்கும் தடவைகள் அதிகரிக்க அதிகரிக்க குறித்தளவான சந்தோசத்தைப் பெற அதிகளவான மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தேவைப்படும்.
இவை இரசாயனப் பொருட்களாதலால் மூளையின் நரம்புக்கணத்தாக்க செயல் முறையில் பாதிப்பை ஏற்படுத்தி மன அழுத்தம்,தொடர்பாடல் சிக்கல்கள், ஆளுமைப் பிறழ்வுகள், தற்கொலை எண்ணங்கள், சுயகௌரவமின்மை, கவனஞ்செலுத்த முடியாமை, ஞாபகத்திறன் இழப்பு, கற்றலில் நாட்டமின்மை, சமூக உறவிலிருந்து விலகுதல், குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயலில் ஈடுபடுதல் போன்ற நிலமைகளுக்கு உட்படுத்தி விடுகின்றது.
மேலும் இதய நோய்களன, சிறுநீரகக் கோளாறுகள், நரம்புசார்ந்த வலுவின்மைகள், ஈரலில் பாதிப்பு மற்றும் புற்றுநோய் எனும் நோய்நிலைகளையும் ஏற்படுத்தி உயிரைப் போக்கிவிடுகின்றன.
எனவே நாம் இதிலிருந்து பாதுகாப்புப் பெற்று சிறந்ததொரு எதிர்கால சந்ததியை நிலைநாட்ட போதை எனும் கொடிய அரக்கனுக்கெதிராக  ஒன்றிணைந்து போராட வேண்டும்.
போதைப்பழக்கமுடையோருடன் நட்பைத் தவிர்த்தல், எந்தவொரு போதைப்பொருளையும் பரிசீலித்துப் பார்க்காதிருத்தல், சட்ட மற்றும் சமூக விழுமியங்களை மதித்து ஒழுகுதல், கல்வியிலும் இணைபாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபடல், நல்ல பொழுது போக்குகளில் நாட்டங்கொள்ளல் மற்றும் வாழ்க்கைத்திறன்களை தம்மில் வளர்த்துக்கொள்ளல் என்பன போதைப்பொருளுக்கு உட்படாமல் பாதுகாப்பைப் பெறும் வழிகளாகும். உங்களுக்குக்கிடைத்த அழகியவாழ்வை பெறுமதியுள்ளதாகவும் தரமானதாகவும்  வடிவமைத்துக் கொள்ள முயலும்போது நீங்கள் எதிர்கால சமூகத்தின் சிற்பிகளாக திகழுவீர்கள் என்றார். இதில்
பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் துஷ்யந்தனும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்