Mon. Aug 10th, 2026

பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை

வவுனியாவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை; ஒரு வார கால அவகாசம்!

 

பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் (Helmet) அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காகப் பெற்றோர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க தலைமையில், வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று விசேட விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது, தகுந்த தலைக்கவசம் இன்றித் தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி வந்த பெற்றோர்கள் மறிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், சிறுவர்களுக்கான தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டன.

 

இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க,

 

இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குள் மோட்டார் சைக்கிள்களில் அழைத்து வரப்படும் அனைத்துச் சிறுவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் பிரத்யேகத் தலைக்கவசம் அணிவிக்கப்பட வேண்டும். இந்த ஒரு வார கால அவகாசம் நிறைவடைந்த பின்னர், விதியை மீறும் பெற்றோர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

 

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் பதிவாகின்றன. இதில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் சிறுவர்கள் பாரிய தலைக்காயங்களுக்கு உள்ளாகி, உயிரிழக்கும் அல்லது நிரந்தரப் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

 

இதன் காரணமாகவே வவுனியா போக்குவரத்து பொலிஸார் இந்த விசேட அதிரடிப் பரிசோதனையையும் விழிப்புணர்வையும் ஆரம்பித்துள்ளனர்.

 

பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் ஓட்டுநர் மட்டுமன்றி, பின்னால் பயணிக்கும் நபரும் (அவர் சிறுவராக இருந்தாலும்) தரச்சான்றிதழ் பெற்ற தலைக்கவசத்தை (SLSI Certified Helmet) அணிவது கட்டாயமாகும்.அத்துடன் இலங்கையில் பதிவாகும் மொத்த வீதி விபத்துக்களில் 40% க்கும் அதிகமானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகவே உள்ளன.

 

காலை வேளையில் பாடசாலைக்கு அவசரமாகப் பிள்ளைகளை அழைத்து வரும்போது, பெற்றோர்கள் கவனக் குறைவாக முந்திச் செல்ல முற்படுவதால் பாடசாலை வலயங்களுக்கு (School Zones) அருகிலேயே அதிக விபத்துகள் ஏற்படுவதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed