Mon. Oct 7th, 2024

பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமக்கள்- பொய் வழக்கு போட்ட பிரதேச சபை உறுப்பினர்

வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள் கைது செய்யப்பட்ட இளைஞனை விடுவிக்கக்கோரி பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமை யால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நேற்று ஏற்பட்டிருந்தது

சம்பவம் பற்றி தெரியவருவதாவது , சுதந்திரக்கட்சியின் வவுனியா தெற்கு தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், நபர் ஒருவர் தன்னை தாக்கியதாகத் தெரிவித்து பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்
குறித்த முறைப்பாட்டிற்கமைய புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த கபில்ராஜ் என்ற 23 வயதுடைய இளைஞரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்திருந்தனர். குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தாக்கியதாகப் கூறப்பட்ட முறைப்பாடு பொய் எனக் கூறியும், கைது செய்யபட்ட இளைஞரை விடுவிக்கக்கோரியும் புதிய கற்பகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு எதிர்ப்பு வெளியிட்டனர் .

இந்த நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினரிடம் விளக்கம் கேட்கச் சென்ற கைது செய்யப்பட்ட இளைஞரின் மனைவியை, பிரதேசசபை உறுப்பினரும், அவரது மனைவியும் தாக்கியதாகத் தெரிவித்து இன்னொரு முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் பிரதேச சபை உறுப்பினரின் மனைவியைக் கைது செய்தனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை மேலும் அதிகரித்தது

பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது செய்யப்பட்ட பின்னர் ஆறுதலைடைந்த பொது மக்கள் இரவு 11.30 மணியளவில் பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸ் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்
இந்நிலையில் முறைப்பாடளித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கபில்ராஜ் என்பவரின் மனைவி ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்