புலம்பெயர் தமிழ் உறவுகளே; சற்றுச் சிந்தியுங்கள்…!தாயகத்தில் இருந்து ஒரு குரல்
புலம்பெயர் தமிழ் உறவுகளே; சற்றுச் சிந்தியுங்கள்…!
இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள்.
மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள்.
இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள்.
பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்கின்றார்கள். எனவே இங்குள்ள ஒருமாத காலத்திலும் உங்கள் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தால் சிறப்பு. (குறிப்பாக நீங்கள் கூழ் காச்சி தண்ணி அடிக்கேக்க எடுக்கின்ற புகைப்படங்களை தயவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற வேண்டாம். )
தற்பொழுதுள்ள இளைய தலைமுறையை இலங்கையிலேயே தொடர்ந்து தமது அடையாளத்துடன் வாழ அறிவுரை கூறுங்கள். இன்னமும் தமிழர் குடிபெயர்ந்தால் இது சிங்கள மக்களிற்கான நாடு என்பதில் பிழையேதும் இல்லை.
குறிப்பாக கற்ற அறிவுசார் உறவுகளிடத்தில் உங்கள் கல்விக்கு நீங்கள் வெளிநாடு வந்தால் இவ்வளவு உழைக்கலாம் என இலங்கை ரூபாவில் பெருக்கி கூறாதீர்கள்; அவர்கள் தான் எதிர்காலத்தில் ஏனைய தமிழ் மக்களிற்கு பலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கப்போகின்றவர்கள்.
*அனைத்து புலம்பெயர் உறவுகளிற்குமான பதிவல்ல, சூழ்நிலை சார்ந்து ( depends on the circumstance ) பொருந்தக்கூடிய உறவுகளிற்கானது.
பதிவிட்டவர் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பழைய மாணவரும் எனது நண்பரும் சிறந்த இளம் ஆளுமை நண்பர் தனஞ்செயன் அனைவரும் பகிர்ந்து கொள்வோம் விழிப்புணர்வு தான் விடுதலையின் முதற்படி.