புதுடில்லி, கொச்சின், மும்பைக்கு 16ம் திகதி விமானசேவை பலாலியில் இருந்து.
பலாலி- இந்தியா இடையிலான விமான சேவை அடுத்த மாதம் 16ம் திகதி தொடங்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்தியாவின் புதுடில்லி, கொச்சி மற்றும் மும்பாய் ஆகிய நகரங்களிலுள்ள விமான நிலையங்களுக்கே பலாலியிலிருந்து விமான சேவைகள் இடம்பெறும் என்று
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி தெரிவித்தார். பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான
பயணிகள் விமான சேவையை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களான அலையன்ஸ் ஏயர் மற்றும் இண்டிகோ (Alliance Air and Indigo) ஆகியன யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கான சேவையில்
ஈடுபட பேச்சுக்கள் நடத்தியுள்ளன. அத்துடன், பிற பிராந்திய விமான சேவை நிறுவனங்களும் யாழ்ப்பாணத்திலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளன.
பலாலி விமான நிலையத்தில் 45 மீற்றர் அகலத்துடன் 2 ஆயிரத்து 300 மீற்றர் நீள ஓடுபாதை உள்ளது. குடிவரவு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் பாசன் ரத்நாயக்க,
திணைக்களத்திலிருந்து தேவையான ஊழியர்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுங்கத் துறையும் அதன் செயல்பாட்டிற்கான
ஏற்பாடுகளை செய்து வருகிறது. விமான நிலையத்தில் வரிச்சலுகை விற்பனை நிலையமும் (duty free shop) அமைக்கப்பட உள்ளது.