பாடசாலை மாணவர் தலைவர் குழாத்தினை தெரிவு செய்யும் போது உரிய முறைமைகளைப் பின்பற்ற வேண்டும் – வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோண் குயின்ரஸ்

பாடசாலை மாணவர் தலைவர் குழாத்தினை தெரிவு செய்யும் போது உரிய முறைமைகளைப் பின்பற்ற வேண்டும் என வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோண் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கு மாணவர் தலைவர் பதவியானது பாடசாலை மாணவர் தலைவர்களுக்கு அளப்பரியதொரு வாய்ப்பினை வழங்குகின்றது. பாடசாலைக் கற்றல், கற்பித்தல் செயன்முறையைப் போன்றே ஒட்டுமொத்தப் பாடசாலை அமைப்பின் மீதும் மாணவர் தலைவர் ஒருவரது வெற்றிகரமான தலைமைத்துவம் தாக்கம் செலுத்த முடியும். பாடசாலை மாணவர் தலைவர்களை தெரிவு செய்யும் போது பல்வேறு பாடசாலைகளிலும் பல்வேறு செயன்முறைகள் பயன்படுத்தப்படுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இதன் காரணத்தினால் மாணவர் தலைவர்களுக்கான நியமனம் தொடர்பாக கிடைக்கப்பெறும் பல்வேறு வகை முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலைமை காரணமாக மாணவர் தலைவர்களைத் தெரிவு செய்யும் போது வெளிப்படைத் தன்மையுடன் கூடிய செயன்முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தி கல்வியமைச்சின் இணைப் பாட விதானம் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையினால் சுற்றுநிருப இலக்கம் 12/2024 இன் கீழ் பாடசாலை மாணவர் தலைவர் குழாத்தினை தெரிவு செய்தல் தொடர்பான “ஆலோசனைக் கையேடு” தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அச்சுற்றுநிருபத்தை தற்போது கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம் மாணவர் தலைவர்களைத் தெரிவு செய்யும் போது அதிபர்கள் நியாயமான செயன்முறை ஒன்றைப் பின்பற்றுவது எவ்வாறு என்பது தொடர்பாகவும் மாணவர் தலைவர்களது ஆளுமையை விருத்தி செய்வதற்கு அவசியமான அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொள்வதனூடாக வலுவான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்குவது எவ்வாறு என்பது தொடர்பாகவும் பிரதானமாகக் கவனம் செலுத்தப்படுகின்றது.
அதன்படி 2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர் தலைவர்களைத் தெரிவு செய்தல் தொடர்பாக இவ் ஆலோசனைக் கையேடு அமுலில் இருக்கும் என்பதுடன், 2025 ஆம் ஆண்டு முதல் மாணவர் தலைவர் குழாத்தினை நியமிப்பதற்காக 2024 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலோசனைக் கையேட்டிற்கமைய செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (21)